
'எனக்கு நெருக்கடி கொடுப்பதற்கென்றே, எங்கிருந்து தான் கிளம்பி வருகின்றனரோ...' என புலம்புகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில், அடுத்த ஆண்டு மத்தியில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்று, 'ஹாட்ரிக்' அடிக்கலாம் என மனக்கோட்டை கட்டியுள்ளார், பினராயி விஜயன்.
அவரது மனக்கோட்டையை மண் கோட்டையாக இடித்து தள்ள, சொந்த கட்சிக்குள்ளேயே பலர் கிளம்பி உள்ளனர். பினராயி விஜயனின் முந்தைய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தவர், ஜி.சுதாகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், முதல்வர் பதவிக்கு பினராயி விஜயனுடன் மல்லுக்கட்டியவர்.
பினராயி விஜயனின் செல்வாக்கிற்கு முன், இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றபோது, சுதாகரனை அமைச்சரவையில் இருந்து கழற்றி விட்டார்.
இதனால், கடும் அதிருப்தியில் உள்ள சுதாகரன், தன் தொகுதியான ஆலப்புழாவிற்கு பத்திரிகையாளர்களுடன் சமீபத்தில் சென்றார். தான், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது துவங்கப்பட்ட திட்டங்கள், இன்னும் முடிவடையாமல் நிலுவையில் இருப்பதை அவர்களிடம் விரிவாக விளக்கினார்.
இந்த தகவல் பத்திரிகைகளில் வெளியானதும் கடுப்பான பினராயி விஜயன், 'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கொசு தொல்லையை தாங்க முடியவில்லையே...' என, பொருமுகிறார்.