PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

'கொஞ்சம் குற்ற பின்னணியும், கொஞ்சம் அரசியல் செல்வாக்கும் இருந்தால் போதும்; தேர்தல்களில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் போலிருக்கிறது...' என, பீஹாரைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி.,யான பப்பு யாதவை பார்த்து பெருமூச்சு விடுகின்றனர், இங்குள்ள நேர்மையான அரசியல்வாதிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் பப்பு யாதவுக்கு செல்வாக்கு உண்டு. இவர் மீது, கொலை, மிரட்டல், கடத்தல் உட்பட, 41 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இதுவரை, ஆறு முறை லோக்சபா எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார். ஏதாவது ஒரு தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு இவருக்கு செல்வாக்கு உள்ளது.
கடந்த ஓராண்டாக, காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால், சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பீஹாரில் யாத்திரை நடத்திய போது, பப்பு யாதவை கண்டுகொள்ளவில்லை.
இதனால், ஆத்திரம் அடைந்த பப்பு யாதவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருடன் நெருக்கம் காட்டத் துவங்கியுள்ளார். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இவரது தலை தென்படுகிறது.
இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், 'பீஹாரில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன் போட்டியிட்டு, அமைச்சரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பப்பு யாதவுக்கு நேரம் நன்றாக இருக்கிறது...' என, வெறுப்புடன் பேசுகின்றனர்.