PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைகளில், 'அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மொபைல் போன், பொது இடங்களில் இலவச, 'வை-பை' வசதி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர், அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என, கலர் கலராக எத்தனையோ மத்தாப்புகளை கொளுத்திப் போட்டனர். ஆனால், எல்லாமே 'புஸ்ஸ்ஸ்!' இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி, தி.மு.க., வாக்குறுதிகள் பற்றி பேசுவது வெட்கக்கேடு!
டவுட் தனபாலு: இதன் மூலமா என்ன சொல்ல வர்றீங்க...? 'தேர்தல் வாக்குறுதிகள் தந்துட்டு, அதை நிறைவேற்றாம, 'அல்வா' தருவது எல்லா கட்சிகளும் செய்றதுதான்... ஆனா, எங்களை மட்டும் விமர்சிக்கிறது நியாயமா'ன்னு கேட்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழலில், அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலர் லண்டன் அன்பழகன், கொள்ளிடம் ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், மாநில துணை செயலர்கள் குட்டிமணி, அமிர்தராஜ் உட்பட 35 பேர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலை யில், அக்கட்சியில் இணைந்தனர்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., வில் இணைந்த நிர்வாகிகள் எல்லாரும், பா.ம.க., வலுவா இருக்கும் பகுதிகளை சேர்ந்தவங்க... இதை, பா.ம.க.,வின் தந்தையும், தனயனும் சீரியசா எடுத்துக்காம அலட்சியமா இருந்தால், ஒவ்வொரு நிர்வாகியா கூடாரத்தை காலி செய்துட்டு கிளம்பிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: மாமல்லபுரத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்தினோம். அனைத்துக் கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தனர். அதை பார்த்ததில் இருந்து தி.மு.க.,வுக்கு வயிற்றெரிச்சல் கூடிவிட்டது. பா.ம.க.,வில் நடக்கும் குழப்பத்திற்கு காரணம் என் அப்பாவோ, நானோ இல்லை; தி.மு.க., தான். நம்முடைய கட்சியிலும் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் வாயிலாகத்தான் தி.மு.க., குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறது. சூழ்ச்சியை உடைத்தெறிவோம்.
டவுட் தனபாலு: உங்க கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி, ராமதாஸ்கூட இருக்காரு... மணி எப்பவுமே தி.மு.க., தரப்புடன் நட்புல இருப்பாரு... அதனால, அவர் வாயிலா பா.ம.க.,வில் தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்திட்டு இருக்குன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!