PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: நான் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் மதுரை மேற்கு தொகுதி முழுதும், தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல்களை கேட்டுப் பெறுகின்றனர். மொபைல் போன் எண்ணையும் குறித்துக் கொள்கின்றனர். பின், அரசு நலத்திட்ட உதவிகள் தருவோம் என்று கூறுகின்றனர். ஏற்கனவே டிபன் பாக்ஸ் கொடுத்துள்ளனர். திருமங்கலம், ஈரோடு கிழக்கு தொகுதி பார்முலா போல, மதுரை மேற்கு பார்முலா உருவாகி இருக்கிறது.
டவுட் தனபாலு: உங்களை தோற்கடிக்கணும் என்றே, அசகாய சூரரான அமைச்சர் மூர்த்தியிடம் உங்க தொகுதி பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் தந்திருக்காரு... மூர்த்தி ஆட்கள் இப்பவே களம் இறங்கிட்டதால, தொடர்ந்து மூன்று முறை மதுரை மேற்கில் ஜெயிச்ச நீங்க, நாலாவது முறையா வெற்றிக்கனியை பறிக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!
திருப்பூர் தொகுதி இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன்: தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்கடந்த ஜன., 5ல் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் தேர்தல் நடத்தி, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல, கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2023 ஆக., 5ல் முடிந்து விட்டது. இரண்டு ஆண்டு கடந்த பின்பும், கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழக அரசு தாமதிக்காமல் இந்த தேர்தல்களை நடத்த வேண்டும்.
டவுட் தனபாலு: வர்ற 2026 சட்டசபை தேர்தல்ல 'சீட்' கிடைக்காத கோபத்துல இருக்கப்போற கட்சிக்காரங்களை உள்ளாட்சி அமைப்புகளில் 'சீட்' தந்து சரிகட்ட வேண்டாமா... அதனால, சட்டசபை தேர்தல் முடிஞ்ச பின்தான் உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்துவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: போதைப்பொருள் கலாசாரத்தில் மூழ்கியுள்ள தி.மு.க., ஆட்சியில், 80 வயது மூதாட்டிக்குக்கூட பாலியல் வன்கொடுமை நடக்கும் அவலம் உள்ளது. தமிழகம் எங்கே போகிறது என்று தெரியாத நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், தமிழகம் முழுதும் நடந்தாலும், கும்பகர்ண துாக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், இனியும் போதைப்பொருளை ஒழிக்கவோ, சட்டம் -- ஒழுங்கை காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
டவுட் தனபாலு: தெளிவான மனநிலையில் இருக்கும் யாராவது, 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் பண்ணுவாங்களா... 'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கிடும்' என்பது போல, போதையை ஒழித்தாலே, இதுபோன்ற வக்கிர குற்றங்கள் குறைஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!