PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் குறித்து எடுத்துரைக்கும் வகையில் பிரான்ஸ், இத்தாலி, பிலிப்பைன்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற இந்தியா வின் அனைத்து கட்சி எம்.பி.,க் கள் குழுவில், அ.தி.மு.க., சார்பில் நானும் சென்றேன். அப்போது, தமிழக அரசின் நிலவரம் குறித்து, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கேட்டனர். தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது போன்ற தி.மு.க., அரசின் திருப்தி இல்லாத செயல்பாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்தனர். தி.மு.க., அரசின் அவலநிலை உலகம் முழுதும் தெரிந்துள்ளது.
டவுட் தனபாலு: உங்களை வெளிநாடுகளுக்கு எதுக்காக அனுப்பி வச்சாங்க...? அந்த வேலையை மட்டும் பார்த்துட்டு, நாடு திரும்பியிருக்கலாமே... கடல் கடந்தும் போய், உங்க உள்ளூர் வாய்க்கால் வரப்பு தகராறு பஞ்சாயத்தை பேசியது சரியா என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: 'தங்கள் இளைய மகன் சண்முக பாண்டியனை, தொடர்ந்து படங்களில் நடிக்க வைத்தால், அதன் வாயிலாக தே.மு.தி.க.,வுக்கு விளம்பரம் கிடைக்கும். மக்கள் மத்தியில், கட்சி மீண்டும் எழுச்சி பெறும். பிற்காலத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலராகவும் அவரை நியமிக்கலாம்' என, பிரேமலதாவிடம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அதற்கு, 'சண்முக பாண்டியன் நடிப்பில் தொடர்ந்து படம் எடுக்கவும், வெளியிடவும், நிர்வாகிகள் உதவ வேண்டும்' என, பிரேமலதா கேட்டுள்ளார்.
டவுட் தனபாலு: சரியா போச்சு... பிரேமலதா மனம் குளிரட்டுமேன்னு கட்சி நிர்வாகிகள், ஏதோ யோசனை கொடுக்க போக, கடைசியில அவங்க பாக்கெட்டையே பதம் பார்க்கிற அளவுக்கு போயிடுச்சே... இனி, மறந்தும்கூட இந்த மாதிரி ஐடியாக்களை தே.மு.தி.க.,வினர் தருவாங்களா என்பது, 'டவுட்'தான்!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: நாங்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு கூட செல்ல முடியும். ஆனால், மதவாத சக்தியான பா.ஜ., அங்கே இருப்பதால், அதற்கு வாய்ப்பில்லை. சங்பரிவார் அமைப்புகள் அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கும் சூழலில், அதை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணி மீது நீங்க அதிருப்தி யில் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன... 'ஒருவேளை பா.ஜ.,வை நீங்க கழற்றி விட்டால், அங்க வரவும் தயாரா இருக்கோம்'னு அ.தி.மு.க., தலைமைக்கு சிக்னல் தர்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!