PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒருநாளும் கொள்கை, கோட்பாடுகள், லட்சியங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். இது தமிழக மக்களுக்கும், தி.மு.க.,வுக்கும் நன்றாக தெரியும். ஏற்கனவே, அண்ணாதுரை, ஜெயலலிதாவை பற்றி பா.ஜ., தரப்பில்அவதுாறாக பேசியதால், பழனிசாமி என்ன முடிவெடுத்தார் என்பதை அனைவரும் அறிவர். அதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.
டவுட் தனபாலு: 'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஏடாகூடமான பேச்சால, ஏற்கனவே பா.ஜ., கூட்டணியை பட்டுன்னு முறிச்ச வரலாறு எங்களுக்கு இருக்கு... அதனால, பார்த்து சூதானமா நடந்துக்குங்க... எங்களுக்கு ஆட்சியை பிடிக்கணும் என்ற லட்சியத்தைவிட கொள்கையே முக்கியம்'னு பா.ஜ., தரப்புக்கு எச்சரிக்கை பண்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: பா.ம.க.,வில் தன் மகன் அன்புமணியுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், ராமதாஸ் தன் 60வது ஆண்டு திருமண நாளை, மனைவி சரஸ்வதி மற்றும் இரண்டு மகள்கள், பேரன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன், தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடினார். ராமதாஸ் தம்பதியிடம் குடும்ப உறுப்பினர்கள் ஆசி பெற்றனர். நிகழ்ச்சியை அன்புமணியும், அவரது மனைவி, குழந்தைகளும் புறக்கணித்தனர்.
டவுட் தனபாலு: வாழ்க்கையில் 60வது திருமண நாள் கொண்டாடும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது... அந்த அரிய நிகழ்வில், ஒட்டுமொத்த குடும்பமும், அவங்களிடம் ஆசி வாங்குவது வழக்கம்... தந்தைக்கு ஒரே மகனாக இருந்தும், இந்த நிகழ்ச்சியை அன்புமணி புறக்கணிச்சுட்டதால, ரெண்டுபட்ட பா.ம.க., இனி ஒன்றுபடுவது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், தமிழக பா.ஜ.,வில் மாநில துணைத் தலைவர், செயலர், பொதுச்செயலர், பொருளாளர் என, 28 பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 'அண்ணாமலையின் ஆதரவாளர்களையும் இணைத்தே பட்டியல் தயார் செய்ய வேண்டும்' என, கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தியதை தொடர்ந்து, அவரிடம் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமைப்பு செயலர் கேசவ விநாயகம் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தினர்.
டவுட் தனபாலு: இப்படி ஆளாளுக்கு, 'கோட்டா' முறையில பதவிகளை பங்கிட்டுக் கொடுத்தால், கட்சியை வளர்ப்பதைவிட, அவங்கவங்க கோஷ்டிகளை வளர்ப்பதில் தான் அக்கறை காட்டுவாங்க... இது தொடர்ந்தால், தமிழக காங்., போலவே தமிழக பா.ஜ.,வும் மாறிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!