PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: ஹிந்து மதம் என ஒன்று கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகே, ஹிந்து மதம் உருவானது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. ஆனால், அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது ஹிந்து மதம். ஓட்டுக்காக முருக பக்தர்கள் என்று சொல்லி, மாய வலை வீச பார்க்கின்றனர்.
டவுட் தனபாலு: ஹிந்து மதத்தில் பாகுபாடு உண்டுன்னு சொல்றீங்களே... சிவனுக்கு தினமும் பன்றிக்கறி படைத்து, தன் கண்ணையே கடவுளுக்கு தந்த வேடன் திண்ணனை தானே, சிவன் ஆட்கொண்டு கண்ணப்ப நாயனாராக்கினாரு... அதேபோல, சிதம்பரத்தில் நந்தனாருக்கு, நந்தியை விலக்கி காட்சி தந்த சிவன் கதையை எல்லாம் நீங்க படிக்கலையோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: கண்களுக்கு தெரியாத காற்றில்கூட, ஊழல் செய்து அம்பலப்பட்டு, சிறை சென்று வந்த தி.மு.க., - எம்.பி., ராஜா, நாட்டிற்காக உழைத்து கொண்டிருக்கும் அமித் ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக அவலநிலை குறித்து எதுவும் தெரியாமல், 'நான் தான் நம்பர் 1 முதல்வர்' என்ற மாய உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் ஒருவரை தலைவராக கொண்ட மூடர் கூட்டத்திற்கு, மற்ற அனைவரும் முட்டாள்களாகத் தான் தெரிவர்.
டவுட் தனபாலு: '2ஜி' ஊழல் வழக்கில் ராஜா குற்றவாளி இல்லைன்னு, 2017ல் டில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது... இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., 2018ல் செய்த மேல்முறையீடு மனு ஏழு வருஷமா கிணற்றில் போட்ட கல்லா கிடக்குதே... அந்த வழக்கை விரைவுபடுத்தினா, ஆ.ராஜா, 'ஆப்' ராஜாவாகிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அகில இந்திய காங்., செயலரும், தெலுங்கானா காங்., மேலிட பொறுப்பாளருமான விஸ்வநாதன்: வரும் சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தது போல் விடக்கூடாது. நாம் எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளை, ராகுல் வாங்கி தருவார். வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக, அதிக எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபைக்கு செல்வோம்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணி கட்சிகள் எல்லாம், கூடுதல் தொகுதிகள் கேட்கிறது சரி தான்... அதே நேரம், ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க.,வும், போன தேர்தலை விட இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிடணும்னு நினைக்குமே... இந்த எளிய உண்மை, கூட்டணி கட்சிகளுக்கு புரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!