/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
விதிமுறைகளை உருவாக்குவது அவசியம்!
/
விதிமுறைகளை உருவாக்குவது அவசியம்!
PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM
முனைவர்.ப.நாகலிங்கம் பிள்ளை, தாழக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயனடையும் விதமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும், தற்போது, இத்திட்டத்தில் ஊழலும், முறைகேடுகளும் மலிந்துள்ளன.
ஆட்கள் வேலைக்கு வராமலேயே சம்பளம் பட்டுவாடா செய்ததாகக் கணக்கு காண்பிப்பது, வேலைக்கு வருவோர், கையெழுத்து போட்டுவிட்டு உடனே கம்பி நீட்டுவது, அப்படியே வேலை செய்யும் இடத்தில் இருந்தாலும், மர நிழல்களில் படுத்து துாங்குவது, அரட்டை அடிப்பது என பல குறைபாடுகள் இருப்பதை, சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் இன்னொரு கொடுமை என்ன வென்றால், வெளியூரில் இருக்கும் ஆட்களின் பெயர்களைக்கூட பட்டியலில் சேர்த்து பணம் வாங்குவது தான்!
பார்லிமென்டில், காங்கிரஸ் எம்.பி., சோனியா, வேலை நாட்களை, 100லிருந்து, 150 ஆகவும், கூலியை, 400 ரூபாயாக உயர்த்தவும், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசின் தொண்டுத் திட்டங்களில் செலவுக்கேற்ற விளைவுகளை கணக்கிடக் கூடாது என்றாலும், உற்பத்தி மற்றும் வளர்ச்சி நோக்கத்துடன் தீட்டப்படும் திட்டங்களில், அதற்கான பலன்களை கணக்கிட்டே ஆக வேண்டும்.
இல்லையென்றால், அது, நாட்டின் பொருளாதாரத்தையே வீழ்த்தி விடும்!
தொண்டு மற்றும் வளர்ச்சி ஆகியன இணைந்தது தான், 100 நாள் வேலை திட்டம். இதில், ஏழை கிராமவாசிகளுக்கு வாழ்வாதாரம் கொடுப்பது நோக்கமாக இருந்தாலும், அதன் பலன்கள் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது.
நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்யாத எந்தத் திட்டமும் பயனுள்ள திட்டமாகாது; பொருளாதாரச் சீரழிவையே ஏற்படுத்தும்!
எனவே, இத்திட்டத்தை இப்போதுள்ள முறையில் அரசு தொடரும்பட்சத்தில், உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, விதிமுறைகளை உருவாக்குவது அவசியம்!
இல்லையென்றால், இது அரசின் கையைக் கடிக்கும் திட்டமாகவும், ஊழலுக்கும், அரசின் தலையில் மிளகாய் அரைக்கும் செயல்பாட்டிற்கு அரசே அனுமதிக்கும் திட்டமாகவுமே தொடரும்!
'தினமலர்' நாளிதழ் போல் இல்லைங்க!
ஐ.பகவதி
சுந்தரம், விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து எழுதுகிறார்: ஜனநாயகத்தின்
நான்கு துாண்களில் ஒன்றான ஊடகங்கள் மரித்து போய், பல ஆண்டுகளாகின்றன.
சொல்லப் போனால், பத்திரிகைகள் ஒரு சார்பு பார்வையுடன், கருத்து திணிப்பை
மேற்கொள்ள துவங்கி, பி.டி.ஐ., செய்திகள் அருகிப் போய் விட்டன என்று
சொன்னால், அது மிகையில்லை.
இந்நிலையில் தலைதுாக்கியது தான், சமூக
வலைதள ஊடகங்கள். துவக்கத்தில், இவை பெரிய அளவில் கவன ஈர்ப்பை, வரவேற்பை
பெற்றன. பின், அவற்றில் தனி நபர் துதி, வெறுப்பு, தரமற்ற பதிவுகள்,
அநாகரிக, 'கமென்ட்' பதிவு என, தற்போது, அவையும் தணிக்கைக்கு உட்படுத்த
வேண்டிய நிலையில் உள்ளன.
அந்தக்காலத்தில் ஒரு சாய்வு நாற்காலி,
பக்கத்தில் கைத்தடி, இவற்றுடன், 'லெட்டர்ஸ் டு தி எடிட்டர்' என, ஓர் ஆங்கில
நாளிதழில் வெளிவரும். அந்த, 'லெட்டர்ஸ் டு தி எடிட்டர்' பகுதியில், தன்
கடிதம் வெளியாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர், அது வெளிவந்த நாளிதழை
கையில் எடுத்துக் கொண்டு, தெருமுனை வரை சென்று, எதிரில் காணும்
தெரிந்தவர்களிடம் எல்லாம் நாளிதழை காட்டி ஆனந்தமடைவார்.
இன்றும்
பத்திரிகைகளில் கடிதங்கள், கட்டுரைகள், கருத்துகள் வெளிவருகின்றன; ஆனால்,
அது சாதாரண மனிதர்களிடம் இருந்து பெறப்படுவதில்லை. முனைவர், அரசியல்வாதி,
திரைப்பட துறையினர், நிதி ஆலோசகர், வணிக மேம்பாட்டாளர் என, இவர்களிடம்
மட்டுமே சம்பந்தமில்லாத ஒரு பதிவுக்கு பதில் தேடுவதும், அவர்கள்
தெரிவிக்கும் கருத்துகள், கட்டுரைகள் மட்டுமே வெளியாகும் நிலையே உள்ளது.
இத்தனை
ஆண்டுகளில் நானும் அனைத்து பத்திரிகைகளையும் மாற்றி மாற்றி படித்து
விட்டு, இறுதியில் புறப்பட்ட இடத்துக்கே வந்து விட்டேன். ஆம்... 'தினமலர்'
நாளிதழை தான் சொல்கிறேன்.
துதி பாடுவதற்காக சொல்ல வில்லை; பல
பத்திரிகைகளை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... அனைத்து தரப்பு
செய்திகளையும் தருவதுடன், சாதாரண மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை,
கருத்துகளை பதிவு செய்திட, 'இது உங்கள் இடம்' பகுதி, ஆங்கில பத்திரிகைக்கு
நிகராக குறுக்கெழுத்து புதிர்...
அணை நீர் மட்டம், காய்கறி விலை,
வானிலை நிலவரம், இன்றைய நிகழ்ச்சிகள், டீ கடை பெஞ்ச், பக்கவாத்தியம்,
பழமொழி, இதேநாளில் அன்று, டவுட் தனபாலு, ஆன்மிகம் - அறிவியல் என
அனைத்தையும் உள்ளடக்கி வெளிவரும், 'தினமலர்' நாளிதழின் பணி, உண்மையில்
வெகு சிறப்பு! ஒரு நல்ல நாளிதழைப் படித்த ஆத்ம திருப்தி ஏற்படுகிறது
என்றால், அது மிகையல்ல!
தமிழ் பிழைத்து போகட்டுமே!
ஆர்.ஷியாம்
சுந்தர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழி; அம்மொழிக்கு ஊக்கத்தொகையாக
நுாற்றுக்கணக்கான கோடிகளை மத்திய அரசு வழங்குகிறது.
'ஆனால்,
செம்மொழியான தமிழுக்கு வெறும், 24 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளது. தமிழ்
மொழி விவகாரத்தில், மத்திய அரசு நாடகம் ஆடுகிறது' என்று கூறியுள்ளார்,
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.
மத்திய அரசு நாடகம் ஆடுவதாகவே வைத்துக் கொள்வோம்...
தமிழ் மொழிதான் கழகத்திற்கு உயிராயிற்றே!
அந்த
தமிழுக்காக, வங்காள விரிகுடாவில் கலைஞரின் பேனா சிற்பம் நிறுவ, 94 கோடிகளை
ஒதுக்கி வைத்துள்ளீர்களே... அதை, தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே!
தமிழை
வைத்து, பல உயிர்களை காவு வாங்கி ஆட்சியைப் பிடித்து, அதன் வாயிலாக
ராஜபோகமாக வாழும் கழகத்தினர், அந்த தமிழ் மொழிக்காக, மாநில அரசின்
கருவூலத்திலிருந்து செலவழிக்கலாமே?
முதல்வர் ஸ்டாலின் தன்
தந்தையின் புகழ்பாட, சிலைகளை நிறுவியும், பெயர் பலகைகளை வைத்தும்,
விழாக்கள் நடத்தியும் மக்களின் வரிப் பணத்தை விரயம் ஆக்குவதற்கு பதில்,
அப்பணத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கலாமே!
மத்திய அரசு நிதி கொடுத்தால் தான், தமிழ் வளர்ச்சி பற்றி யோசிப்பீர்களா?
தமிழகத்தில் கழகம் ஆட்சிக்கு வரும்முன், தமிழ் எனும் செம்மொழி, வளம் குன்றாமல், மெருகு குறையாமல் தான் இருந்தது.
தமிழை
வைத்து கழகத்தினர் எப்போது பிழைப்பு நடத்த ஆரம்பித்தனரோ, அன்றிலிருந்து
தான், மெல்ல மெல்ல தமிழ் உயிர்நீத்துக் கொண்டிருக்கிறது.
மாநகராட்சி
என்பதை 'மாநரகாட்சி' என்றும், மாமன்னரே என்பதை 'மாமனாரே' என்றும்,
பாதிரியார் என்பதை 'பாரதியார்' என்று எழுதும் அளவில் தான் கழக ஆட்சியில்,
உடன்பிறப்புகளின் தமிழ் புலமை உள்ளது. அதனால், தி.மு.க., வினர் தமிழை
பிழையின்றி பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டாலே, தமிழ் பிழைத்துப் போகும்!