PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீரில்லாத இடத்தில் மீன் பிடிக்க முடியாது; நிலமில்லாதவன் பயிர் செய்ய முடியாது' என்று சொல்வர். அதுபோல், கச்சத்தீவு விவகாரத்தில், நம் மீனவர்களின் வாழ்வாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது.
ஊழல் செய்து, தண்டனையிலிருந்து தப்பிக்க, கச்சத்தீவை தாரைவார்த்த அன்றைய முதல்வர் கருணாநிதி, இலங்கை கடற்படை யால் தமிழக மீனவர்கள் துன்பத்தை அனுபவித்த போது, 'பேராசை பிடித்த மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதுதான் பிரச்னைக்கு காரணம்' என்று குற்றஞ்சாட்டினார்.
அதையெல்லாம் தற்போது மறந்து விட்டு, 'கடந்த 1974ல் பறிபோன கச்சத்தீவு குறித்து கவலைப்படும் பிரதமர் மோடி, அவர் கண்முன், 2,000 சதுர கி.மீ., பகுதிகளை சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார். கச்சத்தீவு பற்றிய கப்சா கதைகள் பேசுவதை அவர் நிறுத்த வேண்டும்' என்று கப்சா விடுகிறார், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப் படும் மீனவர்களுக்கான அபராதத் தொகை, 50,000 ரூபாய் ஆக இருந்த நிலையில், தற்போது அது உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தலா, 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது இலங்கை மன்னார் நீதிமன்றம்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்... ஏன், பிச்சை எடுக்கும் போராட்டம் கூட நடத்தி பார்த்து விட்டனர்; பலன்தான் இல்லை!
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், கவர்னர் ரவியிடம் மீனவர்கள் மனு அளித்தனர். அவரும், 'தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துவேன்' என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம் மேற்கொள்ள இருப்பதாக செய்தி வந்துள்ளது. அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னையையும் பேசி, நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்., மற்றும் தி.மு.க., கட்சிகளின் முகத்தில் கரியைப் பூச, மீண்டும் கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது அத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க ஒப்பந்தமாவது போட வேண்டும்.
மத்திய அரசு நினைத்தால், முடியாதது என்று எதுவுமில்லை!
கனவுகள் கலையலாம்!
என்.ராமகிருஷ்ணன்,
பழனி யில் இருந்து எழுதுகிறார்: 'என் ஆட்சியை எந்த கொம்பனும் குறை சொல்ல
முடியாது' என்று மேடைதோறும் முழங்கி, தனக்கு தானே புகழ் மாலை சூட்டிக்
கொள்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
நாட்டில் பாலாறும், தேனாறும்
ஓடுவது போல், மேடை கிடைத்ததும், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர்
தற்பெருமை பேசியே நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.
உண்மையில்,
காவல் துறை, கல்வி, சுகாதாரம், விவசாயம், பொதுப்பணி துறை என்று அனைத்து
துறைகளும் செயலற்று கிடக்கின்றன; ஊழல் துறை ஒன்று தான் செழிப்பாக
இருக்கிறது!
தமிழகத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது,
பால்வளத்துறைக்கு ஓர் அமைச்சர் இருப்பது போல், பாலியல் புகார் துறை ஒன்றை
உருவாக்கி, அதற்கு ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டும் போல... அந்த அளவிற்கு
பச்சிளம் குழந்தை முதல், பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறல்களுக்கு
ஆளாகின்றனர்.
ஆனாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஈரோடு கிழக்கு
இடைத்தேர்தல் வெற்றியை, வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வெற்றியாக நினைத்து,
கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர், தி.மு.க.,வினர்.
பத்து
கட்சிகளோடு கூட்டணி வைத்து, கூடவே, ஓட்டுக்கும் பணம் கொடுத்து வென்றது ஒரு
வெற்றியா? ஓட்டுக்கு பணம் தராமல் கடந்த தேர்தலை விட, இரு மடங்கு ஓட்டு
வாங்கிய சீமான் அல்லவா உண்மையான வெற்றியாளர்!
'ஆட்டுக்கு தாடி
எப்படியோ, அதேபோல் நாட்டுக்கு கவர்னர்' என்று கூறியவர்கள் தி.மு.க.,வினர்.
ஆனால், இன்று இதே கவர்னர் நீடிக்க வேண்டுமாம்; அப்போது தான் தி.மு.க., வின்
செல்வாக்கு உயரும் என்று கூறுகிறார், ஸ்டாலின்.
காரணம், தங்கள் ஆட்சியின் அவலங்களை மடைமாற்றம் செய்து, அரசியல் செய்ய கவர்னர் பகடைக்காயாக பயன்படுகிறாரே!
நான்கு
ஆண்டு ஆட்சியில், 'ருசி கண்ட பூனை' யாக திரிகின்றனர், தி.மு.க.,வினர்.
ஓட்டுக்கு பணமும், கூட்டணி பலமும் இருப்பதால், மீண்டும் ஆட்சிக்கு வந்து
விடலாம் என்று பகல் கனவு காண்கிறார், ஸ்டாலின்.
சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால், தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது.
கனவுகள் கலையலாம் முதல்வரே!
கல்வியில் ஏன் அரசியல்?
வெ.சீனிவாசன்,
திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவின் மிகப்
பழமையான பல்கலைகளில் ஒன்று, 1851ல் துவங்கப்பட்ட சென்னை பல்கலை.
இங்கு,
கடந்த 14ம் தேதி, 'இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவது எப்படி?'
என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில்
பல்கலை வேந்தரான கவர்னரின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டது.
ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டிய ஒரு கல்வி நிலையத்தில், மதம் சார்ந்த நிகழ்வுக்கு எப்படி அனுமதி கொடுத்தனர்?
இத்தலைப்பை
தேர்ந்தெடுத்தவர் யார், ஏன் தேர்ந்தெடுத்தார், அழுத்தம் கொடுத்தவர்கள்
யார், தலைப்புக்கு அனுமதி அளித்தவர் யார், அனுமதி ஏன் வழங்கப்பட்டது போன்ற
அனைத்தையும் தீர விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய தலைப்பில் விவாதங்கள், பாடங்கள்
சேர்ப்பு, ஆசிரியர்கள், நிர்வாகிகள் நியமனங்களில் முறைகேடுகள், தரம்
தாழ்ந்து கொண்டே போகும் கல்வி... என இவை அனைத்திற்கும் மூல காரணம்,
தி.மு.க.,!
கழகத்தினர், கல்வியில் என்று அரசியல் செய்யத் துவங்கினரோ, அன்றே ஆரம்பித்து விட்டது இந்த அவலம்!
'பல்கலை
வேந்தராக கவர்னர் இருக்கக்கூடாது; முதல்வரே இருக்க வேண்டும். கல்வியை
மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள், கல்வியின்
தரத்தை உயர்த்துவதற்கோ, மாணவர்களின் நலன் கருதியோ, முறைகேடுகளை ஒழிக்கவோ
அல்ல... ஆளுங்கட்சியினர் அரசியல் செய்வதற்கே!
இவர்களுக்கு வளைந்து கொடுக்காத சூரப்பாவை என்ன பாடுபடுத்தினர் என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருந்தனர்!
'ஆமை
புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது' என்பர். அதேபோன்று,
அரசியல்வாதிகள் புகுந்த கல்வி நிலையங்களும் உருப்படுவது கஷ்டமே!