PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து, வடசென்னை எம்.கே.பி., நகர் பஸ் நிலையம் அருகில் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்ட கட்சி அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம் என்பதால், தொண்டர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கும் என, நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதியை சேர்ந்த மாவட்டத்தின் சார்பில், புதிதாக சீரமைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பட்டியலை, கட்சி தலைமையிடம் அளித்திருந்தனர்; அதில், 1,650 பேர் இடம் பெற்றிருந்தனர். அந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் கூட ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை.
இதனால், பெயருக்கு ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு கட்சியினர் கலைந்து சென்றனர். தொண்டர் ஒருவர், 'பதவிக்கு மட்டும் முட்டி மோதுற நம்ம கட்சியினர், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றால் மட்டும், பெட்டி பாம்பா அடங்கிடுறாங்களே...' என, புலம்பியபடியே நடந்தார்.