PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

சென்னை, ஓட்டேரியில், தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியும், கவிஞருமான சிநேகன் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, 'இன்றைய முதல்வர் என்றும் முதல்வராக இருக்க வேண்டும் என, திராவிட இயக்கத்தினர் விரும்புகின்றனர். நீங்களும், நானும் நினைப்பது போல், ஒரு இயக்கம் நடத்துவது சாதாரணமானது அல்ல; பெருங்கடலில் ஆயிரக்கணக்கான திமிங்கலங்களை சமாளித்து வருவது போன்றது அது.
'அந்த வகையில், கட்டுக்கோப்பாக தி.மு.க.,வை நடத்துகின்றனர். திராவிட இயக்கம், ஆன்மிகத்திற்கு எதிரானது என்றவர்களுக்கு, இந்த ஆட்சி அமைந்த பின்தான் 2,700க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியுமா...' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'கூட்டணி கட்சியில் இருந்தாலும், தி.மு.க.,வின் பிராண்ட் அம்பாசிடர் மாதிரியே பேசுறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.