PUBLISHED ON : ஜூன் 30, 2025 12:00 AM

மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தஞ்சாவூர் அருகே கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'தமிழகம் வளர்ந்துள்ளதாக, தி.மு.க.,வினர் கூறினாலும், எதார்த்தம் அவ்வாறு இல்லை. இதுவரைக்கும் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. மகளிர் சிலருக்கு மட்டும், 1,000 ரூபாயை கொடுத்துவிட்டு, கூடுதல் வரிகள், கட்டணங்கள் என, அந்த வீட்டில் இருந்து ஆண்டுக்கு, 7,000 முதல், 8,000 ரூபாய் வசூல் செய்து விடுகின்றனர்.
'எனவே, இந்த ஆட்சி இருக்கக் கூடாது; அதற்கான வேலைகளை நான் செய்து வருகிறேன்; அதில், வெற்றியும் பெறுவேன்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'முதல்ல, பிரிஞ்சு கிடக்கிற, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பேன்னு சொன்னாங்க... இப்ப, இந்த ஆட்சியை அகற்றுவேன்னு சொல்றாங்க... இவங்க சொல்றதெல்லாம், போகாத ஊருக்கு வழியா தான் இருக்கு...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.