PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தி.மு.க.,
ஆட்சியில், தினமும் சர்வ சாதாரணமாக கொலைகள் நடப்பது, மக்கள் மத்தியில்
அச்சத்தை உருவாக்கி, வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி
வருகிறது. வெட்டப்படுவோர் மிகப்பெரிய ரவுடிகள் என செய்தி பரப்பப்படுவதால்,
நடுரோட்டில் பட்டப்பகலில் கொலை செய்வது நியாயமாகி விடுமா?
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் அறிக்கை: நாடு முழுதும் 15 கோடி விவசாயிகள் உள்ளனர். ஆனால், மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கென 1 லட்சத்து, 37 ஆயிரத்து, 757 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து, 17,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக, அரசு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கார்ப்பரேட்கள் வாங்கிய, 16 லட்சம் கோடி ரூபாய் கடனை விலக்கி வைத்துள்ள மத்திய அரசு, விவசாயிகள் கடனையும் தள்ளுபடி பண்ணி வாழ வைக்கலாமே!
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான சக்திவேல் அறிக்கை: தொகுதி மறுவரையறை தொடர்பாக, தமிழக அரசால் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும், தமிழக அரசின் நோக்கத்தை ஏற்று வரவேற்றுள்ளனர். அதனால் தமிழக அரசு, அவர்களையும் இணைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இனியாவது, தமிழக மக்களின் அரசியல் உரிமைகளை மனதில் வைத்து, அனைத்துக் கட்சிகளையும் இணைத்து செயல்பட முன்வர வேண்டும்.
தமிழகத்தில் கட்சிக்கு ஒரு கூட்டணி கணக்கு இருக்குதே... அதனால், அகில இந்திய கட்சிகளுடன் இணைந்து தமிழக கட்சிகள் எப்படி செயல்படும்?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், 6,597 படுகொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் - - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு தி.மு.க., அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தான் சான்றாகும். தமிழக அரசும், காவல் துறையும் இனியாவது விழித்துக் கொண்டு, குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாலு வருஷமா விழிக்காதவங்க, கடைசி வருஷத்துல மட்டும் விழிச்சுடப் போறாங்களாக்கும்?
அந்த மிகப்பெரிய ரவுடிகளுக்கு, 15 முதல் 20 ஆண்டுகள் தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைத்திருந்தால் இந்த மாதிரி சம்பவங்களை தடுத்திருக்க முடியுமே!