PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: 'சவுக்கு' சங்கரின்
இல்லத்தில் நுழைந்து, அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், மனிதக் கழிவு
உள்ளிட்ட சாக்கடைக் கழிவுகளை கொட்டியுள்ள குரூர செயல் மிகுந்த அதிர்ச்சி
அளிக்கிறது. இது, அநாகரிகத்தின் உச்சம். தி.மு.க., அரசின் மீது களங்கத்தை
ஏற்படுத்துவதற்காகவே, இந்த இழிசெயல் அமைந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள்
அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாடா... இதுக்கும், தி.மு.க.,வுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்லியாச்சு... ஆட்சியாளர்களின் மனம் இனி குளிர்ந்து போயிடுமே!
சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேச்சு: கல்வி கண் போன்றது என்ற கூற்றுக்கு ஏற்ப, மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில், மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர் சிறந்து விளங்க, 40 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, செய்தித்தாள் வாசிப்பு மற்றும் அறிவுத்திறன் போட்டிகளுக்கு, 86 லட்சம் ரூபாய் மற்றும் வளமிகு ஆசிரியர் குழு அமைத்து, தேர்வு பயிற்சிக்கு, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நிதியை ஒதுக்கிட்டா மட்டும் போதாது... அது, முறைகேடுகள் இல்லாம முறையாக செலவழிக்கப் படுகிறதா என்பதையும் கண்காணிக்கணும்!
தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு உறுப்பினரும், நடிகருமான ஜெ.எம்.பஷீர் அறிக்கை: தன்னை நம்பி யாருமே கெட்டது இல்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்கிறார். சசிகலா, உங்களை நம்பித்தானே முதல்வர் பதவியில் உட்கார வைத்து ஏமாந்தார். வரம் தந்தவர்கள் தலையிலேயே கை வைத்தது போல பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் எல்லாரும் உங்களை நம்பி கெட்டவர்கள் தானே.
இவரும் ஒரு காலத்தில் அ.தி.மு.க.,வில் இருந்தவர் தானே... அங்க இருந்து கெட்டுப்போய் தான், தி.மு.க.,வுக்கு வந்துட்டாரோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் உள்ள, 78 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம், அதிலிருந்து பெறப்படும் வருவாய் குறித்து, எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு வருவது, எந்த வகையிலும் அறமோ, நியாயமோ அல்ல. புதிய சுங்கக் கட்டணக் கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை, கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்.
'பகல் கொள்ளைக்கு சிறந்த உதாரணம் சுங்கக் கட்டணம் தான்' எனும் வாகன உரிமையாளர்களின் புலம்பல், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு கேட்குமா?