PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மத்தியில்,
பா.ஜ., அரசு பொறுப்பேற்று, 12வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
நாட்டின் கட்டமைப்பு, மக்கள் நலன், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற பல்வேறு
துறைகளில் சாதனை படைத்துள்ளது. நாடு முழுதும், 400 மருத்துவக் கல்லுாரிகள்,
உள்நாட்டு உற்பத்தி 330 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு, ரேஷனில் அரிசி,
கோதுமை இலவசம், 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் என மத்திய அரசு
செயல்படுத்தும் திட்டங்களை, மாநில அரசுகள் சரியாக பயன்படுத்திக்
கொள்ளவில்லை.
கடந்த நான்காண்டில், தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லுாரியாவது தி.மு.க., அரசு கேட்டு வாங்கியிருக்கலாமே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'ஒவ்வொரு சமூகம் குறித்த சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல், நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதற்காகவே விரிவான ஜாதிவாரி சர்வே நடத்த உள்ளோம்' எனக் கூறியுள்ளார். ஆனால், 'தமிழகம்தான் சமூக நீதியின் தொட்டில்' என்று, எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை படித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து வாய்திறக்க மறுப்பது ஏன்? ஜாதிவாரி சர்வே என்றால், முதல்வருக்கு பாகற்காயை விட மோசமாக கசப்பது ஏன்?
விடுங்க... தமிழகத்தில், அடுத்த வருஷம் தே.ஜ., கூட்டணி மலர்ந்ததும், ஜாதிவாரி சர்வே எடுக்க உத்தரவு போட்டா போச்சு!
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி: வரும் சட்ட சபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி யின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில், 25 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளை கேட்போம். குறைந்தது ஒரு இடத்திலாவது, கண்டிப்பாக போட்டியிடுவோம். தமிழகத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளை கேட்போம்.
மற்ற சின்ன கட்சிகள் எல்லாம், 10 - 20 தொகுதிகள்னு பேசிட்டு இருக்கிறப்ப, ஆறு தொகுதிகள் போதும்கிற இவரது தன்னடக்கம் புல்லரிக்க வைக்குது!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அறிக்கை: கூட்டணி ஆட்சி, பா.ஜ., ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வயிற்றில் புளியை கரைக்கிறது கமலாலயம். இன்னொரு பக்கம், 'பழனிசாமிதான் அடுத்த முதல்வர்' என, துதி பொழிந்து கொண்டிருக்கின்றனர். ஒரே கூட்டணியில் துாற்றவும் செய்கின்றனர்;துதியும் பாடுகின்றனர். இப்படி ஒரு மாய உலகில் வாழும் பழனிசாமியை மீட்க வழியே இல்லை.
'வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி' என, இவங்க மட்டும் மாய உலகில் வாழலாமா?