PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

கோபி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேட்டி: 'தமிழகத்தில்
வரும் 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி ஆட்சிதான்' என மத்திய அமைச்சர்
அமித் ஷா கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் தான் பதில் அளிக்க
வேண்டும்; என்னை போன்ற தொண்டர்கள் பதிலளிக்கக் கூடாது. மதுரையில் நடக்கும்
முருக பக்தர்கள் மாநாட்டில், அ.தி.மு.க.,வினர் கலந்து கொள்வது குறித்து,
பொதுச்செயலர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.
தன்னை சாதாரண தொண்டர் என
சொல்லி, தன்னடக்கத்தை காட்டுறாரா அல்லது கட்சியில் பழனிசாமி வைக்கிறதுதான்
சட்டம்னு விரக்தியை காட்டுறாரான்னு தெரியலையே?
முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான பழனியப்பன் பேச்சு: தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை என்பது, 2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான முன்னோட்டம். உறுப்பினர் சேர்க்கையின்போது, தங்கள் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட மக்களை நிர்வாகிகள் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களை, மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலின், 24 மணி நேரமும் உழைத்து வருகிறார். அவரது உழைப்பில், 50 சதவீதம் கட்சியினர் உழைத்தாலே, ஏழா-வது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும்.
'மகளிர் உரிமைத்தொகையை ஓட்டுரிமை தொகை மாதிரி குடுத்துடுவோம்'னு சொல்றாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: தொகுதி மறுசீரமைப்பை பா.ஜ., திட்டமிட்டது போல் கொண்டு வந்தால், தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்; வடமாநிலங்களே ஆட்சியை தீர்மானிக்கும். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு இது புரியவில்லை; தெரிய வில்லை. தொகுதி மறுசீரமைப்பால், தமிழகத்திற்கான லோக்சபா எம்.பி.,க்களின் பிரதிநிதித்துவம் குறையும்.
இவரது இந்த கருத்துக்கு அகில இந்திய காங்., தலைவர்கள் ஆதரவு தருவாங்களா?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் பேட்டி: தி.மு.க., தனியாக நின்றால், பா.ஜ.,வும் அதுகுறித்து யோசிக்கலாம். தி.மு.க., கூட்டணியோடு வரும்போது, அதற்கு இணையாக கூட்டணியை உருவாக்கினால்தான் தி.மு.க.,வை தோற்கடிக்க முடியும். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே ஒரே நோக்கம். உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னது போல, 2026க்குப் பின், தி.மு.க., என்ற கட்சியே இருக்காது.
வர்ற தேர்தலுக்குப் பின் தி.மு.க.,வே இருக்காது என்றால், எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜ.,தான் உட்காரும்னு சொல்றாரோ?