/
தினம் தினம்
/
பேச்சு, பேட்டி, அறிக்கை
/
கடைசி வரைக்கும் உழைக்க வேண்டும்!
/
கடைசி வரைக்கும் உழைக்க வேண்டும்!
PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

சென்னை, அடையாறு பகுதியில், ட்ரை சைக்கிள்' மூலம் வீடு வீடாக பால் பாக்கெட் வினியோகிக்கும், 75 வயது மூதாட்டி தங்கம்: சொந்த ஊர் சேலம். தற்போது, சென்னை கண்ணகி நகரில் குடியிருக்கிறேன். 48 ஆண்டுகளாக இந்த ஏரியாவில் இருக்கிற வீடுகளுக்கு எல்லாம் பால் பாக்கெட் போட்டு வருகிறேன்.
அதிகாலை 3:30 மணிக்கெல்லாம் அடையாறு பால் டிப்போவுக்கு சென்று, பால் பாக்கெட்டுகளை வண்டியில் ஏற்றி, வீடுகளில் போட ஆரம்பித்து விடுவேன்.
அதன்பின் ஒருவரது வீட்டில், வீட்டு வேலை பார்க்க சென்று விடுவேன். வேலையை முடித்து, என் வீட்டுக்கு செல்ல மாலை 4:00 மணி ஆகிவிடும்.
எனக்கு, 20 வயது இருக்கும்போது, 65 வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் அம்மா. ஒரு குழந்தை பிறந்த பின்தான், கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஐந்து பிள்ளைகள் இருக்கும் விஷயம் எனக்கு தெரியவந்தது.
'சரி இதுதான் நம் தலைவிதி' என, அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டேன். என் இரு மகன்களையும் காப்பாற்ற வேண்டுமே என எண்ணி, பால் பாக்கெட் போடும் வேலையை தொடர்ந்தேன்.
அதன்பின் வீட்டு வேலைகளுக்கும் சென்றேன். காலையில் மகன்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு, ஜல்லி உடைக்கும் வேலைக்கு சென்று விடுவேன். மாலை 5:00 மணிக்கு வந்து பால் பாக்கெட் போடுவேன்.
இதுபோன்று கஷ்டப்பட்டு இரு மகன்களையும் வளர்த்து, 10 பைசாகூட கடன் வாங்காமல், திருமணம் செய்து வைத்தேன்.
ஆனாலும், இரு மகன்களாலும் எந்த பலனும் இல்லை. அவர்கள் இருவருமே இறந்து விட்டனர். எனக்கென எந்த ஆதரவும் கிடையாது. இந்த பால் வண்டிதான் எனக்கு எல்லாமே.
எவ்வளவு புயல், மழை வந்தாலும் லீவு போடாமல், பால் பாக்கெட் போட்டு விடுவேன். எந்த வீட்டுக்கு, எத்தனை பால் பாக்கெட் போடணும், என்ன கலர் பாக்கெட் போடணும் என்பது எல்லாம் எனக்கு மனப்பாடம்.
எனக்கு இந்த வேலையில் மாதம், 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதிலும் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய கொடுத்து விடுவேன்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் டீ மட்டும்தான் குடிப்பேன்; வேறு எதுவும் சாப்பிட மாட்டேன்.
பால் பாக்கெட்டுகளை போட்டு முடித்துவிட்டு, வீட்டுக்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவேன். வெளியில் சாப்பிடும் பழக்கமில்லை.
எனக்கென தனிப்பட்ட ஆசை எதுவும் இல்லை. கடைசி வரைக்கும் உழைக்க வேண்டும். யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல், நிம்மதியாக போய் சேர்ந்துவிட வேண்டும்.