PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை:பழைய அரசு
பஸ்களை ஏலத்தில் எடுத்து வந்து, அதை கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளின்
சேவைக்கு பயன்படுத்த முயற்சிப்போர், 'குறைவான தொகை என்பதால் ஏலத்தில்
எடுத்து வந்தோம். ஆனால், பிறகுதான் தெரிந்தது, அவை முறையாக
பராமரிக்கப்படாத, வெறும் எலும்புக்கூடுகள்' என புலம்புவது வழக்கம். ஆம்...
இந்த நிலையில்தான், ஏர் இந்தியா விமானங்களை கையில் எடுத்த, டாடா
குழுமத்தின் பரிதாப நிலையும் உள்ளது.
அ.தி.மு.க.,வை தினமும் வசைபாடி இவருக்கு போரடிச்சு போயிடுச்சோ?
தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'யார் வலிமையாக இல்லாமல் இருக்கின்றனரோ, அவர்கள், தங்களின் அடையாளங்களை காட்டுவதற்காக மதத்தை, கோவில்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கின்றனரோ, அவர்கள், தங்களை எதிர்ப்பவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காக, கோவில்களை ஆக்கிரமித்து, அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
கனிமொழி எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், அது நாங்கதான்னு பதிலடி மூலமா பகிரங்கப்படுத்திட்டாரே!
தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வேன்' என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால் முதல்வராகி, 50 மாதமாகியும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இன்றைய, விலைவாசி உயர்வில் தற்போதைய, 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்பதை முதல்வர் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அடிக்கடி, 'ரோடு ஷோ' நடத்தி மக்களை சந்திக்கிற முதல்வருக்கு விலைவாசி பத்தி எல்லாம் தெரியாதா என்ன?
தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பி.எஸ்.மாசிலாமணி அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக, மாங்காய் விளைச்சல் மிக மிக குறைந்து விவசாயிகளை பாதித்தது. தற்போது இதன் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்படியான விலை இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆந்திராவை போல், தமிழக அரசும் மானியத்துடன் மாங்காயை கிலோ, 20 ரூபாய் விலையில் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆந்திர அரசுக்கு மத்திய பா.ஜ., அரசின் உதவி இருக்கு... தமிழக அரசுக்கு அப்படியில்லையே!