PUBLISHED ON : ஜூன் 23, 2025 12:00 AM

அன்புமணி அணியின், பா.ம.க., பொருளாளர் திலகபாமா பேச்சு:
தற்போது
ஆட்சியில் உள்ள கட்சி, டாஸ்மாக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நெடுஞ்சாலையில் மதுக்கடை இருக்கக் கூடாது என உத்தரவு இருந்தும்,
ஆட்சியாளர்கள், மாவட்ட நெடுஞ்சாலையாக மாற்றி, கடை வாசலை மாற்றி வைத்து,
அதாவது உட்புறமாக திருப்பி வைத்து, கடை நடத்துகின்றனர்.
எப்படி வாசலை வச்சாலும், 'குடி'மகன்கள் கூட்டம் கும்மியடிக்க தானே செய்யுது!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவர், கா.லியாகத் அலிகான் அறிக்கை: கடந்த நான்கு ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் எத்தனையோ நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார், முதல்வர் ஸ்டாலின். அவருக்கு பெண்கள், மாணவ - மாணவியர் மத்தியில் பெருகும் ஆதரவை பார்த்தால், தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, 2026ல் ஆட்சியை பிடிப்பதை, அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்தாலும் தடுக்க முடியாது.
'எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து வந்தாலும், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது'ன்னு சவால் விட்டே, அவங்களை ஒன்று சேர்த்துடுவார் போலிருக்கே!
தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச் செயலர், பா.குமரய்யா பேட்டி: கொரோனா காலத்தில், உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்ததோடு, அவரது குடும்பத்துக்கு, அவப்பெயர் ஏற்படும் வகையில், அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைத்த மருத்துவத்துறை இயக்குநர், பின், தவறான தகவல்களை வெளிப்படுத்தி விட்டதாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆயினும், விவேகானந்தன் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை. கருணை உள்ளத்தோடு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாலு வருஷமா எடுக்காத நடவடிக்கையை இனியும் முதல்வர் எடுப்பார்னு நம்புறாரா?
தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய கோரிய வழக்கில், 'வாய்ப்பு இல்லை' என, கேரள உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டி, 25 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை. அவர்களது வங்கி கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா தானே... டில்லியில் வசிக்கும் அவங்க, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி, கடன் தள்ளுபடி பெற்று தரலாமே!