PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி:அ.தி.மு.க.,
- பா.ஜ., கூட்டணியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கும். த.வெ.க., தலைவர்
விஜய், மக்களிடம் நல்ல எழுச்சியை பெற்று உள்ளார். தேர்தல் களத்தில்
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தான் போட்டி இருக்கும். அ.தி.மு.க.,வுடன்
விஜய் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் பேசியது எனக்கு தெரியாது.
அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இடம் பெற்றால், 100 சதவீதம் மகிழ்ச்சி
அடைவேன்.
இவருக்கு, 100 சதவீத மகிழ்ச்சியை அவ்வளவு சீக்கிரமா விஜய் தருவாரா என்பது சந்தேகம் தான்!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அவரது அழுத்தத்தை தாங்க முடியாமல் தான், பெயருக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என, பா.ஜ., சொல்லியிருக்கிறது. ஆனால், இது ஒரு கானல் நீர் தான். புள்ளியியல் துறை நினைத்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பை இரண்டு மாதங்களில் எடுத்து முடிக்கலாம்.
மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்றால், 'மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தணும்'னு முதல்வரிடம் இவர் வலியுறுத்தலாமே!
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பேச்சு: ராமஜென்ம பூமி, பாபர் மசூதி விவகாரத்தை பயன்படுத்தி, வட மாநிலங்களில் அரசியல் ஆதாயம் அடைந்தது போல, தென் மாநிலத்தில் முருகனை பயன்படுத்தி அரசியல் களத்தில் ஆதாயம் தேடும் முயற்சியாகவே, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜ., தலைவர்கள் கூறியது, அவர்களின் அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
முருகன் மாநாடு வெற்றி பெற்று, இவரது துாக்கத்தை கெடுத்திருப்பது நல்லாவே தெரியுது!
தமிழக சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர் சந்திரன் ஜெயபால் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் படுகொலை செய்யப்பட்டு, ஓராண்டு ஆகிறது. சி.பி.சி.ஐ.டி., விசாரணை அமைத்தும், இன்றுவரை குற்றவாளிகள் ஒருவர் கூட கைதாகவில்லை. இந்த கொடூர கொலைக்கு பின்னணியாக, சில அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற, போலீஸ் துறை முயற்சிப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஓராண்டு தாமதத்தையே குறை சொல்றாரே... அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடந்து, 13 வருஷமாகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது இவருக்கு தெரியாதா?