PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: சென்னை பல்கலையின்
கிண்டி வளாகத்தில், 'நான் முதல்வன்' திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற
கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில், பல்லிகள் இறந்து
கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்சியில், தலைமை அதிகாரிகள்
முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, ஒரு அலட்சியத்துடன், மக்கள் மீது அக்கறை
இல்லாமல் செயல்படும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் இமேஜ் சரிந்திருக்கிறது.
முதல்வர் பெயரில் செயல்படுத்தும் திட்டத்திலேயே அதிகாரிகள் இப்படி இருந்தால், மற்ற திட்டங்களின் கதியை பற்றி கேட்கவே வேண்டாம்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'செங்கொடியிடம் வாலாட்டினால், ஹிந்து முன்னணியின் வால் ஒட்ட நறுக்கப்படும்' என, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட, தி.மு.க.,விடம் உண்டி குலுக்கி கையேந்துவோர், ஹிந்து முன்னணி பெயரை சொல்லக்கூட அருகதையற்றவர்கள். திருப்பூரிலும், கோவையிலும், உங்கள் கூடாரத்தை காலி செய்தது ஹிந்து முன்னணி என்பதை புரிந்து நடந்து கொள்ளவும்.
மா.கம்யூ.,க்களிடம் எல்லாம் மல்லுக்கட்டி இவங்க சக்தியை வீணாக்கணுமா...? அவங்களை துாண்டி விடும் தி.மு.க.,வுக்கு எதிராகத் தான் இவங்க கம்பு சுத்தணும்!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சின் பின் சக்கரம் கழன்று விபத்து நடந்துள்ளது. தமிழகம் முழுதும் பெரும்பாலான இடங்களில், காலாவதியான பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், புதிய பஸ்கள் வாங்க, பழைய பஸ்களை பராமரிக்க, பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அது எங்கே செல்கிறது?
அந்த நிதி எங்கே போச்சுன்னு தெரியலை... ஆனா, அது மக்கள் நலனுக்காக செலவிடப்படலை என்பது மட்டும் உறுதி!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, 15ம் ஊதிய விகிதத்தின்படி, வரும் மாதம் புதிய ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஊதியத்தை நிர்ணயம் செய்வதில், திட்டமிட்டு பல மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால், போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு, மாதம் 1,000 முதல் 3,000 ரூபாய் வரை ஊதிய இழப்பு ஏற்படும். 30,000 தொழிலாளர்கள், இந்த ஊதிய சுரண்டலால் கடுமையாக பாதிக்கப்படுவர்.
'தொழிலாளர்களின் தோழன்' என, தொண்டை தண்ணீர் வற்ற குரல் கொடுக்கும் கம்யூ., தொழிற்சங்கங்கள் எங்கே போயின?