PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:'நடிகர்கள்,
முக்கிய பிரமுகர்கள் வீட்டில், போதைப்பொருள் பயன்பாட்டுடன் பார்ட்டி
நடக்கும்' என, திரைத்துறையை சேர்ந்த ஒரு பெண் பேட்டி கொடுத்தார். அதை
யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரை போலீசார் அழைத்து, விசாரித்து நடவடிக்கையை
துவக்கி இருக்கலாம். போதைப்பொருள் ஒழிப்பு விவகாரத்தில் தெரிந்தும்
தெரியாதது போல், காவல்துறை நடந்து கொள்வது, வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
புகார் கொடுத்தாலே நம்ம போலீசார் கண்டுக்க மாட்டாங்க... இதுல, 'வாலன்டியரா' போய் எல்லாம் நடவடிக்கை எடுப்பாங்களா?
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும்,1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர திராணியில்லை. தொழில் துவங்க ஏற்ற 17 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை. தங்கள் சாராய ஆலை விரிவாக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி, தமிழக தொழில் துறையை மோசமான இடத்திற்கு கொண்டு செல்பவர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது.
'தொழில் துறையில் தமிழகம் நம்பர் 1 மாநிலம்'னு பெருமை அடிச்சுக்கிட்டாங்களே... 'டாஸ்மாக்' கும் ஒரு தொழில் தான் என்பதால், அதை சொல்லியிருப்பாங்களோ?
மா.கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி பேட்டி: ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், கீழடி உள்ளிட்ட அம்சங்களில், மாநில அரசுடன் நாங்கள் ஒத்துப்போகிறோம். ஆனால், நவீன தாராளமய கொள்கைகளில் தி.மு.க.,வுடன் முரண்படுகிறோம்.
இதனால, கூட்டணியை முறிச் சுட்டு வெளியில போயிடாதீங்க... தேர்தல்ல தி.மு.க.,வின் வெற்றி கேள்விக்குறியாகிடும்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கர்நாடகாவில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கொள்முதல் செய்யவும், டன்னுக்கு 4,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்துள்ளன. மாம்பழ விலை வீழ்ச்சியால், தமிழக விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது.
தமிழக மாம்பழ விவசாயி களுக்கு எப்படி நிவாரணம் தரலாம்னு யோசிக்க தான், வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம், துறையின் இயக்குநருடன் அமெரிக்கா போயிருக்காரோ?