PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
'ஆந்திர
துணை முதல்வர் பவன் கல்யாண், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு
வெற்றி பெற முடியுமா? பவன் கல்யாண் வெற்றி பெற்ற பின், என்ன வேண்டுமானாலும்
பேசட்டும்; நாங்கள் கேட்கிறோம்' என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 2011
சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துாரில், முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற
முடியாமல் திணறி வெற்றி பெற்ற, தேர்தல் சரணாகதி வரலாற்றை மறந்து
பேசுகிறார். வரும் சட்டசபை தேர்தலில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
பிரசாரம், முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தப் போகிறது.
சேகர்பாபு மாதம் ஒரு முறையாவது திருப்பதி போயிடுறாரே... அந்த தொகுதியில் நின்று அவரால் ஜெயிக்க முடியுமா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட தமிழக ஊர்க்காவல் படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. பெயரளவில் இந்த அமைப்பு, காவல் துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல் துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஊர்க் காவல் படையினருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
'காவல் துறைக்கு இணையாக பணியாற்றுவதால், கட்டிங் வாங்கி சமாளிச்சுக்கட்டும்'னு கம்முன்னு இருக்காங்களோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
'மொத்த மூலதன செலவினத்தில், 50 சதவீத பங்கு வகிக்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் இடம் பெறவில்லை' என, 'பேங்க் ஆப் பரோடா' அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது. இந்த அறிக்கை வாயிலாக, தொழில்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், தி.மு.க., அரசு அக்கறை காட்டவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
'பேங்க் ஆப் பரோடா மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அப்படித்தான் அறிக்கை தரும்'னு தி.மு.க.,வினர் மழுப்பினாலும் மழுப்புவாங்களே!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை:
அண்ணாதுரை, காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி போல், தங்களுக்கான வழிகாட்டிகளாக முன்னிறுத்த தலைவர்கள் கிடைக்காதவர்கள், கடவுளை தங்கள் கட்சிக்கான தலைவர்களாக்குகின்றனர். அந்த வகையில், முருக பெருமானை தொடர்ந்து பிள்ளையார், அய்யப்பன் உள்ளிட்டோரும், எதிர்காலத்தில் கட்சிகளுக்கு, 'பிராண்ட் அம்பாசிடர்'கள் ஆகக்கூடும்.
உலகம் முழுதும் போற்றக்கூடிய நரேந்திர மோடியை தலைவராக கொண்டவர்களுக்கு, வேறு எந்த தலைவரும் தேவையில்லையே!