PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: தமிழக
முன்னணி நடிகர்கள் - நடிகையர், அரசியல் பிரமுகர்கள் விலை உயர்ந்த போதைப்
பொருட்களுக்கு அடிமையாகி, தற்போது அது அம்பலத்திற்கும் வந்துள்ளது.
தி.மு.க., அரசு இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை
நிரந்தரமாக மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
'டாஸ்மாக்'
கடைகளை திறந்து வச்சிருக்கும்போதே, இவ்வளவு போதைப் பொருட்கள் புழங்குதே...
அதையும் இழுத்து மூடிட்டா, போதைப் பொருட்கள் தாறுமாறா அதிகரிச்சிடாதா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் மிகப்பெரிய சீர்கேடு போதைப் பொருள் புழக்கம். சமீபத்தில் பரபரப்பாகி உள்ள 'கோகைன்' விவகாரம், தமிழகம் மாபெரும் சமுதாய சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு இன்னும் சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய யாரையும் விட்டு விடாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதான் கடைசி சில மாதங்கள்னு சொல்லிட்டாரே... இவங்க ஆதரவில் அமையும் புதிய ஆட்சியில் தான் நடவடிக்கை எடுக்கணும்!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: 'தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு விட்டோம்' என சொல்லும் அமைச்சர் சேகர்பாபு, அதை ஆக்கிரமிப்பு செய்யும்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, தங்கள் கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால், அறநிலையத் துறையில் யாராவது எஞ்சியிருப்பாங்களா என்பது சந்தேகம் தான்!
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் அறிக்கை: தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும், கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும் மத்திய அரசுக்கு எட்டிக்காயாக கசப்பது ஏன்? தமிழகத்திற்கு கல்வி நிதியும் மறுக்கப்படுகிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 14.50 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளது. ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்விக்கு, வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.
அதனால தான், அ.தி.மு.க., கூட்டணி குடைக்குள்ள பா.ஜ.,வினர் தேர்தலை சந்திக்க வர்றாங்களோ?