PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த, உச்ச நீதிமன்ற
முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நீதிமன்றங்களால் ஊழல் குற்றவாளி என
தீர்ப்பளிக்கப்பட்ட, லாலு பிரசாத் யாதவை சந்தித்துள்ளார். 'அவரை சந்தித்தது
ஏன்?' என்ற கேள்விக்கு, 'அவர் என்ன சாதாரண மனிதரா' என, பதில்
அளித்துள்ளார். இதென்ன பிரமாதம்... முன்னாள் பிரதமரை கொன்ற கொலை
குற்றவாளியை, ஆரத்தழுவி கட்டியணைத்து வரவேற்ற முதல்வரையே நாம்
பார்த்திருக்கும்போது, இது ஒரு பொருட்டே அல்ல! பேரறிவாளனை கட்டியணைத்து
முதல்வர் ஸ்டாலின் வரவேற்றதை, காங்கிரசாரே மறந்துட்டாலும், இவர் மறக்க
மாட்டேங்கிறாரே!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப் பட்ட, முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அ.தி.மு.க., தலைவர்களுக்கு குலதெய்வம் ஸ்ரீராமராகவும், அ.தி.மு.க., தலைமை கழகம் அமித் ஷாவின் இல்லமாகவும், மொத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்ற பா.ஜ.,வின் துணை அமைப்புகளுள் ஒன்றாகவும் அ.தி.மு.க., மாறி இருக்கிறது.
அ.தி.மு.க.,வை தினமும் வசை பாடவில்லை என்றால், இவருக்கு துாக்கம் வராது போலும்!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சியினர் இருந்தனர்; இருக்கின்றனர்; இருப்பர். எங்களது ஒற்றை இலக்கு, 2026ல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவது. இதை உணர்ந்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே, எங்கள் தலைமை யின் எண்ணம்.
பழனிசாமிக்கு எதிராக கலக குரல் கொடுத்த செங்கோட்டையனை அமித் ஷா அழைத்து பேசியப்பவே, இவங்க கட்சியின் திட்டம் பட்டவர்த்தனமாகிடுச்சே!
பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி அறிக்கை: கர்நாடகாவில், இரண்டாவது முறையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும், 22ம் தேதி முதல் நடக்கவுள்ளது. கர்நாடக மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில காங்., அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், 15 நாட்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
பேசாம, 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சி யுடன் தான் கூட்டணி அமைப்பேன்' என்று இவர் அறிவித்து விடலாமே!