PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

மா.கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா கரத் பேட்டி: வடமாநிலங்களில்
தான், ஜாதிய ஆணவப் படுகொலைகள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அந்த
மாநிலங்களில் எல்லாம் பா.ஜ., தான் ஆட்சி செய்கிறது. ஆணவப்படுகொலைக்கு
எதிராக சட்டம் இயற்ற பல்வேறு பரிந்துரைகள் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு
வந்துள்ளன. ஆனால், மோடி அரசு சட்டம் இயற்ற மறுத்து வருகிறது. எனவே, மத்திய
அரசை எதிர்க்கும் தி.மு.க., அரசு, ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., இதுபோன்ற, 'சென்சிட்டிவ்' விஷயங்களை,
ஒருபோதும் ஏறெடுத்துப் பார்க்காதுன்னு புரிஞ்சிக்கிட்டே இப்படி ஒரு
கோரிக்கையை வைக்கிறாங்களே... இது நியாயமா?
தமிழக பா.ஜ., பிரமுகரான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு மக்கள் கூட்டம் திரள்கிறது. மாற்றம் வர வேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர். அ.தி.மு.க., வுக்கு, 35 சதவீத ஓட்டுகளும், பா.ஜ.,வுக்கு, 8 சதவீத ஓட்டுகளும், தெலுங்கானா துணை முதல்வர் பவன் கல்யாண் பிரசாரத்தால், தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகள், 8 சதவீதமும் கிடைக்கும். இதன் வாயிலாக, மொத்தம், 51 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க., அணிக்கு கிடைக்கும்.
கணக்கெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு... ஆனா, இதெல்லாம் நடக்குமா என்பது தான், 'மில்லியன் டாலர்' கேள்வி!
தமிழக காங்., துணை தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி பேட்டி: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை போன்றவர்கள் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறாரே தவிர, பழனிசாமி தான் முதல்வர் என அறுதியிட்டு சொல்லவில்லை. யார் முதல்வர் என்பதை, அமித் ஷா தான் முடிவு செய்வார்.
மத்த கட்சிக்காரங்க நிலைமை எப்படி வேணாலும் இருக்கட்டும்... இவங்க கட்சி சார்பில், ஒரு துணை முதல்வர் பதவியாவது தி.மு.க.,விடம் கேட்டு வாங்க முடியுமா?
காங்., மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலில், 12 பேர் மாற்றி வாக்கு அளித்து உள்ளனர் என்று கூறினால், அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பதையும், செல்லாத ஓட்டு 14 என்று கூறுவதையும் பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்து தர வேண்டும்.
நீங்களே சொன்னாலோ அல்லது பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்துச் சொன்னாலோ, ஓட்டு போட்ட சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மானம் போயிடும். அதைத் தவிர்க்க, 'கப்சிப்'பென இருப்பதே நல்லதுன்னு, புரிஞ்சிக்கிட்டீங்களோ?