PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:52 AM

தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் அறிக்கை:
சென்னை மாநகராட்சியில், 22 சட்டசபை தொகுதிகளும், 200 வார்டுகளும் உள்ளன. ஒரு மேயரால் இதை நிர்வகிப்பது கடினம். தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, மாநகராட்சியை நிர்வகிப்பது எளிமையாக மாறும். சென்னை மக்களுக்கான அடிப்படை வசதி கள் உடனுக்குடன் கிடைக்கும். அரசியல் ரீதியாக நிறைய பேருக்கு பதவிகள் கிடைக்கும்;
வளர்ச்சி பணிகளால் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். கர்நாடக தலைநகர் பெங்களூரை, ஐந்து மாநகராட்சிகளாக பிரிச்சிருக்காங்க... அதுபோல, இங்கும் செய்வது நிர்வாகத்தை மேம்படுத்த உதவும்!
தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அன்னியூர் சிவா அறிக்கை:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் த.வெ.க., ஆட்சி நடக்கிறது. கர்நாடக முதல்வர் பதவியை சிவகுமார் ஏற்றுக்கொண்டதும், முதல் பணியாக, மேகதாது அணை கட்டும் முயற்சியை எடுத்து வருகிறார். ஆனால், தன் ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ற பயத்தில், மேகதாது அணை பிரச்னையில் வாய் திறக்கவே, 'ரீல்ஸ்' விஜய் அரசு பயப்படுகிறது.
உங்க ஆட்சியில், மேகதாது அணைக்கு எதிராக நீங்க போட்ட வழக்கில் சரியான வாதங்களை வைக்காமல் விட்டதால் தான், உச்ச நீதிமன்றத்தில் அந்த மனுக்கள் தள்ளுபடியாகிடுச்சு!
த.மா.கா., அமைப்பு செயலர் பதவியில் இருந்து விலகிய நந்து அறிக்கை: கடந்த 40 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியிலும், மூப்பனார், வாசன் தலைமையிலான த.மா.கா.,விலும் பணியாற்றி இருக்கிறேன். சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என, வாசனிடம் வலியுறுத்தினோம். ஆனால், தே.ஜ., கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தோம். த.வெ.க.,வுடன் கூட்டணி வைத்திருந்தால், அமைச்சரவையில் இடம் பெற்றிருப்போம். என் அரசியல் எதிர்காலம் கருதி, த.மா.கா.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
அது சரி... ஆளுங்கட்சி அரசில் அங்கம் வகிக்கும் தாய் கட்சியான காங்கிரசுக்கு போகும் முடிவை எடுத்துட்டாரோ?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி:
'நீட் தேர்வின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, வல்லுநர் குழு அமைத்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில், மத்திய அரசிற்கு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு தரு வோம்' என்ற முதல்வர் விஜயின் உறுதி மகிழ்ச்சி அளிக்கிறது.
'நீட்' தேர்வை இனி புறக்கணிக்க முடியாது என்ற உண்மையை விஜய் உணர்ந்துட்டார் போலும்!
