PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:27 AM

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தமிழக தேர்தலில் நடந்தது, இயல்பாக நடந்த அரசியல் மாற்றமாக தெரியவில்லை. பா.ஜ., ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி நடக்கும் புதுச்சேரிக்குள் நுழையாத அலை; தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத அலை இது. எப்படி வென்றோம் என வென்றவருக்கே விளங்கவில்லை. எப்படி தோற்றோம் என தோற்றவருக்கும் புரியவில்லை.
விஜய் வெற்றிக்கு இளைஞர்களின் அமோக ஆதரவும்; ஸ்டாலின் தோல்விக்கு அவரது கட்சியினர் மட்டுமே காரணம் என்பது தான் கலப்படமில்லாத உண்மை!
செங்கல்பட்டு சட்டசபை தொகுதியின் த.வெ.க., பொருளாளர் ரவிச்சந்திரன் பேச்சு:
முதல்வர் விஜய், டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில், 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து கோரிக்கை வைத்ததால், இளைஞர்கள் பாராட்டுகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்காக துவக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பணியை, மகளிர் பாராட்டுகின்றனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையால், 'மக்கள் ஆட்சி' என, அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் போது, எதிர்க்கட்சிகளுக்கு பாராட்ட மனமில்லை.
எந்த எதிர்க்கட்சியாவது, ஆளுங்கட்சியின் சாதனைகளை பாராட்டுமா...? அவங்க விமர்சனங் களை காதில் போட்டுக்காம உங்க பணிகளை தொடருங்க!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
தமிழக சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யும் செயலியை அறிமுகப்படுத்தும் முன், அரசு மருத்துவமனைகளுக்கு அதிகமாக வருவது யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எல்லாரும், 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பரா? அரசு மருத்துவமனைகளின் துாய்மை, மருத்துவர்கள் பணி நேரம், மருத்துவத்தின் தரம் என, பலவற்றை மேம்படுத்தலாம். அனைத்தையும் விட நோயாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
வாஸ்தவம் தான்... அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையை விட, கனிவான வார்த்தைகள் தான் முக்கியம்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் ராமலிங்கம் பேட்டி: இதுவரை, தமிழக முதல்வர் விஜய் செய்து கொண்டிருக்கும் பணிகளை பார்க்கும்போது, ஓரளவு அக்கறையோடு செயல்படுவதாக தெரிகிறது. அவர், மத்திய அரசோடு இணைந்து பணியாற்றி, தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவேண்டும். இதை விஜய் உணர்ந்து செயல்படுவார்; செயல்ப ட்டு கொண்டிருக்கிறார்.
விஜய் இன்னும் சிறப்பாக செயல்படணும் என்றால், மத்திய பா.ஜ., அரசு தமிழகத்துக்கு தேவையான நிதியுதவியை பாரபட்சம் பார்க்காமல் வழங்கி உதவணும்!
