PUBLISHED ON : ஆக 08, 2026 12:53 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
'டாஸ்மாக்' மது வகைகளை, 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை வருவதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வி தான் இது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடை களை நடத்துகிறோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.
இப்படி பேசுவதை விட்டுட்டு, 'நிழல் பட்ஜெட்' போடுற திறமையை, 'டாஸ்மாக்'கை நிறுத்தி, அதன் மூலம் வரும் வருமானத்தை ஈடுகட்ட, 'ஐடியா' கொடுக்கலாமே!
ம.தி.மு.க., - - எம்.எல்.ஏ., செந்தில்செல்வன் பேச்சு:
த.வெ.க., கூட்டணியில் ம.தி.மு.க., இணைந்தவுடன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி, எங்களை வைகோ நிர்ப் பந்தித்தார். எங்களை வெற்றி பெற வைத்த மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது என்பதால், நாங்கள் ராஜினாமா செய்ய முடியாது எனக் கூறி விட்டோம். நாங்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களாகவே தொடர்வோம்.
எந்தக் கட்சியில் யார் இருக்கின்றனர் என்பதை விட, மக்கள் பிரச்னைக்கு யார் முன்னாடி வந்து நிற்கிறாங்க என்பது தான் முக்கியம்.
தமிழக அரசின் நிதித்துறை செயலர் சித்திக் பேட்டி:
தமிழகத்தின் நிதி நிலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. வருவாயை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மேலும் உயர்த்தும் திட்டம் இல்லை. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால், மாநிலத்தின் கடன் விகிதம் கடந்த ஆண்டின், 3.4 சதவீதத்தில் இருந்து, நடப்பாண்டில் 3.17 சதவீதமாக குறையும். அடுத்த, 50 ஆண்டுகள் வரை கடனை குறைக்க முடியாது. மத்திய அரசின் அனுமதியுடன் தான் கடன் வாங்குகிறோம்.
அடுத்த, 50 வருஷத்துக்கு கடனை குறைக்க முடியாதா? அப்ப, 'அரசு வாங்கிய கடனை அடைப்பது உங்கள் கடமை'ன்னு, நம்ம பேரக் குழந்தைகள்கிட்ட சொல்லிட வேண்டியது தான்!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி :
காவிரி அமைப்புகளின் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும், தமிழகத்துக்கு திறக்க மறுப்பதால் காவிரி டெல்டாவில், 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டதில், 1 லட்சம் ஏக் கர் பயிர்கள் காய்ந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரி நீர் அரசியலுக்கான கருவி அல்ல; விவசாயிகளின் உயிர்நாடி என்பதை இரு மாநில அரசியல்வாதிகளும் உணர வேண்டும்!
