PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடத்தும், 'போஜனம்' என்ற உணவகத்தை நடத்தி வரும், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி: எனக்கு பூர்வீகம், கடலுார் மாவட்டம் சிதம்பரம். படித்து வளர்ந்தது சென்னை தான்.
எங்கள் குடும்பத்தில் பலரும், 'கேட்டரிங்' துறையில் பல ஆண்டு அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் செய்ததெல்லாம் பெரிய அளவிலான திருமண கேட்டரிங்.
ஆனால், 'ஹோம் ஸ்டைல் கேட்டரிங்'கா எடுத்து செய்தது, நான் மட்டும்தான். சிறு அளவில் ஒரு மெஸ் ஆரம்பிக்கலாம் என்றுதான் முதலில் யோசித்தேன். ஆனால், அது இன்று தினமும் 600 பேரின் பசியாற்றும் அளவிற்கு பெரிதாக வளர்ந்திருக்கிறது.
ஆரம்பத்தில், 10க்கு 10 இடத்தில் ஆரம்பித்தோம். அதன்பின் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடும்படி மாற்றினோம். அதன்பின் மதிய சாப்பாடு, இரவு டிபன், சாப்பாடு என வளர்ந்தது.
நான் வீட்டில் சமைக்கிற இல்லத்தரசிகளை வேலைக்கு எடுத்தேன். அவர்களிடம் பெரிதாக படிப்பறிவு எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருந்தது.
வீட்டு மனுஷங்களுக்கு சமைக்கிற அன்பும், அக்கறையும் இருந்தது. அப்படி நாங்கள் ஆரம்பத்தில் வேலைக்கு எடுத்தவர்கள் தான், இன்று வரைக்கும் எங்களுடன் இருக்கின்றனர்.
கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டபோது, பெரும்பாலான உணவகங்களை மூடினர். என் பணியாளர்களிடம், 'என்னால் முழு சம்பளம் கொடுக்க முடியாது.
நீங்கள் இங்கேயே சாப்பிடலாம், உங்க குடும்பத்துக்கும் எடுத்துச் செல்லலாம். முடிந்த சம்பளத்தை கொடுக்கிறேன். வேலை பார்க்க தயாரா?' என்று கேட்டபோது, ஒருவர்கூட 'நோ' சொல்லாமல், உடனே சம்மதித்தனர்.
ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தரும் டிப்சை இங்கு வேலை பார்க்கிற யாரும் எடுத்துச் செல்ல மாட்டார்கள். யாருக்கு, எவ்வளவு டிப்ஸ் வந்தாலும், அதை பொதுவான ஒரு உண்டியலில் போட்டு விடுவர்.
அனைவருமே உழைக்கின்றனர்; அது எல்லாருக்கும் தானே சென்று சேர வேண்டும் என்று, வார கடைசியில் எல்லாரும் பிரித்துக் கொள்வர்.
எங்களின் லஞ்ச் டைம் காலை 11:00 மணிக்கு துவங்கும் என்றாலும், காலை 8:30 மணிக்கு ஒரு பேட்ச் சமைப்போம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கலவை சாதம், ஒரு பொரியல் தயார் செய்து கொடுக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம்; துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீதம் தள்ளுபடியும் உண்டு. இப்போது, 'ஆன்லைன் டெலிவரி'யும் செய்கிறோம். அடுத்து, பார்சலுக்கு மட்டும் கிளைகள் ஆரம்பிக்கிற யோசனையும் இருக்கிறது.