/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தன்னம்பிக்கை பெண்ணாக பார்க்கின்றனர்!
/
தன்னம்பிக்கை பெண்ணாக பார்க்கின்றனர்!
PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

'அல் சலாம் டைப்பிங் மற்றும் கம்ப்யூட்டர் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்' உரிமையாளரான, துாத்துக்குடியைச் சேர்ந்த 24 வயதாகும் சுமையா பேகம்: வீட்டில் வறுமை, ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது அப்பா இறந்து விட்டார். பிளஸ் 2 வரை தொண்டு நிறுவனம் வாயிலாக படித்து முடித்தேன்.
பிளஸ் 2 முடித்ததும், மாதம் 1,000 ரூபாய் சம்பளத்தில் நுாலக உதவியாளர் வேலைக்கு சென்றேன்.
தொலைதுார கல்வி வாயிலாக, பி.ஏ., ஆங்கிலம் படித்தேன். சிலரிடம் உதவி பெற்று, ஒரு இன்ஸ்டிடியூட்டில் 6,500 ரூபாய் கட்டணம் கட்டி, 'டிப்ளமா இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்' என்ற கோர்சில் சேர்ந்தேன். ஆனால், சரியாக சொல்லி தராததால், எனக்கு முழுமையாக புரியவில்லை.
கோர்ஸ் முடித்ததும், 'இங்கேயே வேலைக்கு வர்றியா? கம்ப்யூட்டர் குறித்த படிப்பும் கற்றுக் கொள்ளலாம்' என கேட்டதும், மகிழ்ச்சியுடன் சேர்ந்து கொண்டேன்.
அதன்பின் தான், 'கூகுள், யு டியூப்' எல்லாம் பார்த்து, கம்ப்யூட்டர் தொடர்பான நிறைய கோர்ஸ்களை தெளிவாக, முழுமையாக படித்தேன்.
அடுத்த நாள் வகுப்பில் எடுக்க வேண்டிய சப்ஜெக்ட் குறித்து, முந்தைய நாள் இரவு 12:00 மணி வரை சமூக வலைதளங்களில் தேடி தேடி முழுமையாக தெரிந்து கொள்வேன். தற்போது தொலைதுார கல்வி வாயிலாக, எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
நான் வேலை பார்த்த இன்ஸ்டிடியூட்டில் காலை, 8:30 முதல் மாலை, 6:00 மணி வரை நிற்காமல் ஓடி ஓடி வேலை பார்த்தேன். மாதம் 3,000 ரூபாய் சம்பளம் கட்டுப் படியாகவில்லை.
ஆயினும் எனக்கு வாசலையும், வாய்ப்பையும் திறந்து விட்டது அந்த இன்ஸ்டிடியூட் தான். அந்த நன்றியை அவர்களுக்கு சொல்லிவிட்டு, வெளியே வந்தேன்.
கையில் காசு இல்லை என்றாலும், சொந்தமாக இன்ஸ்டிடியூட் துவங்க முடிவு செய்தேன். கடன் வாங்கி, 2023ல் கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் மற்றும் டைப்பிங் கற்று தரும் இன்ஸ்டிடியூட்டை ஆரம்பித்தேன்.
என்னிடம் படித்த மாணவர்கள் கூறியதை கேட்டு, சிறிது சிறிதாக மாணவர்கள் வர ஆரம்பித்தனர்.
தற்போது, 100 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். அப்படி வருவோரே, மற்றவர்களுக்கும் என் இன்ஸ்டிடியூட்டை பரிந்துரை செய்யும் இலவச விளம்பரம் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.
டைப்பிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், கம்ப்யூட்டர் கோர்ஸ்களுக்கு மாதம் 500 ரூபாயும் வாங்குகிறேன். வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு கட்டண தள்ளுபடியும் உண்டு.
அப்போதெல்லாம், தந்தையில்லாத பெண் பிள்ளை என பலரும் பரிதாபமாக பார்த்தனர்; இப்போது தன்னம்பிக்கை பெண்ணாக பார்க்கின்றனர்.