/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சிறு விஷயங்கள் கூட பெரிய மாற்றங்களை உண்டாக்கும்!
/
சிறு விஷயங்கள் கூட பெரிய மாற்றங்களை உண்டாக்கும்!
PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

சமீபத்தில் நடந்த தன் திருமணத்தை, 'மினிமல் வேஸ்ட் வெட்டிங்'காக நடத்தி, தேசிய அளவில், 'டிரெண்ட்' ஆன சென்னையைச் சேர்ந்த உமா:
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தேன். பொறியியல் முடித்துள்ளேன். ஏழு ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி உள்ளேன். பிளாஸ்டிக் பயன்பாட்டால் கடலும், அதில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுவது தொடர்பாக நிறைய விஷயங்களை படித்து தெரிந்து கொண்டேன். அதில் இருந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஆரம்பித்தேன்.
என் திருமணத்தில் உணவு, தண்ணீர் வீணாகக் கூடாது என்று அம்மாவிடம் சொல்லியபடியே இருப்பேன். அதனால், என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் நீண்ட நாள் நண்பரையே திருமணம் செய்து கொண்டேன். கணவருக்கு என்னை குறித்து தெரியும் என்பதால், 'மினிமல் வேஸ்ட் வெட்டிங்' நடத்த எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.
திருமண மண்டபத்தில் பொருட்கள் வீணாவதை எப்படி தடுக்கலாம் என்று, 'கனெக்ட் பூமி' என்ற அமைப்பிடம் பேசி திட்டமிட்டோம். அவர்கள் தான் கழிவுகளை முறையாக கையாள உதவினர்.
'தண்ணீர், உணவை ஏன் வீணாக்கக் கூடாது, டிஷ்யூ பேப்பர் பயன்பாட்டை குறைப்பது எப்படி' என்பது உட்பட விழிப்புணர்வு போஸ்டர்களை, திருமண மண்டபத்தில், சாப்பிடும் இடத்தில், கை கழுவும் இடத்தில் ஒட்டியிருந்தோம்.
திருமணம் முடிந்ததும், 1,000 கிலோ கழிவுகள் கிடைத்தன. அவற்றில் மட்கும் பொருட்கள், மட்காத பொருட்கள் என தனித்தனியாக பிரித்துக் கொண்டோம். பெரிய அளவில் மீதமான பழங்களை, பசுக்களை பராமரிக்கும் கோசாலைக்கு அனுப்பினோம்.
மீதமான உணவு, கெட்டுப்போன உணவு, மண்டபத்தில் அலங்காரத்துக்கு பயன்படுத்திய பூக்களை, உரமாக மாற்றுவதற்கு கொடுத்து விட்டோம். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை சேகரித்து, செடிகளுக்கு பயன்படுத்தினோம். பாட்டில்களை மொத்தமாக மறுசுழற்சிக்கு அனுப்பி விட்டோம்.
இந்த முயற்சிகளை சமூக வலைதளத்தில் நான் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, பல மாநிலங்களில் இருந்தும், 'இது மாதிரி நாங்களும் செய்ய முடியுமா?' என கேட்டு, 1,000க்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை அனுப்பினர்.
இது மாதிரியான முயற்சிகள் இரண்டு, மூன்று பேரிடம் மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட, எனக்கு சந்தோஷமே.
அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிற விஷயங்களை செய்து வருகிறோம். அதை பாதுகாக்க, நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட பெரிய மாற்றங்களை உருவாக்கும். அந்த மாற்றங்கள் மனநிறைவையும் கொடுக்கும்.
**************************
உழைக்க தயங்காத மனம் இருந்தால் வெற்றி பெறலாம்!
'மலர் ஹெர்பல்ஸ்' என்ற பெயரில், மூலிகையில் அழகுசாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தமிழ்மணி:
கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், திருமணத்துக்கு பின்தான் சென்னை வந்தேன். என் கணவர், சினிமாவில் ஸ்டன்ட் மேனாக வேலை செய்து வந்தார்.
அவருடைய வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. நான் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
எங்களுக்கு மூன்று பிள்ளைகள். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. திடீரென என் கணவருக்கு ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு, வீட்டில் முடங்கினார்.
அதன்பின், குடும்பத்தை நடத்த ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.சிறுவயதில் எங்களுக்கு என் பாட்டி வீட்டிலேயே தயாரித்து கொடுத்த மூலிகை ஹேர் ஆயில் நினைவுக்கு வந்தது. அப்போதே அந்த எண்ணெய்க்கு பலரிடமும் நல்ல வரவேற்பு இருந்தது.அதையே பிசினசாக எடுத்து செய்யலாமா என்று
யோசித்தேன்.
வெறும் 500 ரூபாய் முதலீட்டில், மூலிகை பொருட்களை வைத்து ஹேர் ஆயில் தயாரித்து, தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்தபோது எல்லாருக்கும் பிடித்திருந்தது.
அதை உபயோகித்தவர்கள் அடுத்து சீயக்காய் துாள் தயாரித்து தரும்படி கேட்டனர். அதுவும் பலருக்கும் பிடித்து போனது.அப்படி ஆரம்பித்து இன்று, 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறோம்.ஆரம்பத்தில் எந்த பெயரும் வைக்காமல், 'ஸ்டிக்கர்' கூட ஒட்டாமல் தான் எங்கள் தயாரிப்பு
களை விற்று கொண்டிருந்தோம்.பின், எங்கள் தயாரிப்புகளுக்கு, 'மலர் ஹெர்பல்ஸ்' என்று பெயர் வைத்தோம். அடுத்து, காதி கிராப்டில் எங்கள்
தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்தோம்.
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும், எங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம்.
ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறோம்; 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்திருக்கிறோம்.நாளுக்கு நாள் எங்கள் தயாரிப்புகளை மெருகேற்றியபடியே இருக்கிறோம். வாடிக்கையாளர்களின், 'பீட்பேக்' தான் எங்களுக்கான விளம்பரமே. உழைக்க தயங்காத மனமும், தரத்தில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியும் இருந்தால், எவரும் வெற்றி
பெறலாம்.தொடர்புக்கு: 90941 16622, 98418 87727.