PUBLISHED ON : ஜூன் 30, 2025 12:00 AM

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகில் உள்ள லட்சுமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்:
'எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படித்துள்ளேன். 2018ல் எனக்கு 21 வயது. அப்பா டீக்கடை நடத்தி வருகிறார். அன்று அந்த கொடூரம் நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை.
எலக்ட்ரீஷியன் வேலை செய்கிற நண்பன் ஒருவன், 'பக்கத்தில் ஒரு பில்டிங் ஒர்க் போய்க்கிட்டிருக்கு, கூட வாடா... கம்பி பைப்பை மட்டும் எடுத்து வச்சிட்டு வந்துடலாம்' என்று அழைத்துச் சென்றான்.
வெளியே இருந்து அவன் கம்பி பைப்பை எடுத்துக் கொடுக்க, போர்ட்டிகோ பகுதியில் நின்று நான் வாங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக, மேலே சென்ற மின்கம்பியில் அந்த இரும்பு கம்பி பட்டு பயங்கரமாக, 'ஷாக்' அடித்து, என் இரு கைகளும் பற்றி எரிந்து, கருகி விட்டன.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீக்காயம் பிரிவில் சேர்த்தனர். வேறு வழியில்லாமல், கை முட்டி வரை இரு கைகளை நீக்கிவிட்டனர். மூன்று மாதம் கழித்து, 'டிஸ்சார்ஜ்' ஆனேன். அப்போது முதல், எனக்கு மறுபடியும் கைகள் கிடைத்த வரையிலும் என் அக்கா தான் கவனித்துக் கொண்டார்.
உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது மாதிரி கைகளையும் தானமாக பெறலாம் என்ற தகவல் தெரிய வந்ததால், சென்னை குளோபல் மருத்துவமனையில் பதிவு செய்தோம். 2022 மே மாதம் குளோபல் மருத்துவமனையில் இருந்து, 'நாளைக்கு காலையில் நீங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்; உங்கள் ரத்த மாதிரி தேவைப்படுகிறது' என்று கூறினர்.
சேகரித்த என் ரத்த மாதிரியுடன் மருத்துவர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாதிற்கு சென்று, என் உடலுடன் ஒத்துப்போகுற இரு கைகளை கொண்டு வந்தனர்.
அன்று இரவே ஆப்பரேஷன் ஆரம்பித்து, மறுநாள் தான் முடிந்தது. கண் விழித்துப் பார்த்தபோது, இரு கைகளுடன் இருந்தேன். நம்பவே முடியவில்லை.
எனக்கு கை தானம் கொடுத்த இளம்பெண், ஆமதாபாதில் ஓர் அலுவலகத்தின் நிர்வாகியாக இருந்தார். 26 வயதான அந்த பெண் ஒரு விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு, இறந்து விட்டார். அந்த தேவதை, தன் கைகள் இரண்டையும் எனக்கு கொடுத்த மாதிரி, சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளையும் தந்து, ஐந்து பேருக்கும் மேல் மறுவாழ்வு கொடுத்து, எங்கள் வாயிலாக வாழ்ந்து வருகிறார்.
நான் கைகள் இல்லாத நேரத்தில், என் உறவுக்கார பெண் தீபிகா என்னை விரும்புவதாக கூறினார். அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று, நான் ஏற்று கொள்ளவில்லை.
எனக்கு கைகள் கிடைத்ததும் தீபிகாவையே திருமணம் செய்து கொண்டேன். என் அக்கா, மறுவாழ்வு கொடுத்த இளம்பெண், என் மனைவி தீபிகா இந்த மூன்று பெண்களும் தான் எனக்கு தெய்வங்கள்!