/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அதிக உழைப்பை போட்டு மீண்டும் மார்க்கெட்டை பிடித்தேன்!
/
அதிக உழைப்பை போட்டு மீண்டும் மார்க்கெட்டை பிடித்தேன்!
அதிக உழைப்பை போட்டு மீண்டும் மார்க்கெட்டை பிடித்தேன்!
அதிக உழைப்பை போட்டு மீண்டும் மார்க்கெட்டை பிடித்தேன்!
PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

திருச்சியை அடுத்து உள்ள ஸ்ரீரங்கத்தில், உணவுப் பொருட்கள் உற்பத்தி, மாவு மில், இரவுநேர உணவகம் ஆகிய ஒருங்கிணைந்த தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வரும் மனோகரி: என் சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம், கடுவெளி. திருமணமாகி இங்கு வந்து பிள்ளைகள் பிறந்த பின், அவர்களுக்கு சத்து மாவு அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தபோது, அக்கம் பக்கத்தில் கேட்டவர்களுக்கும் தயார் செய்து கொடுத்தேன்.
'தொடர்ந்து வாங்குகிறோம்' என்றனர். கூடவே, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா பொடி, ரசப்பொடி, மசாலா பொடிகள் என செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.
'இதையே தொழிலாக ஆரம்பிக்கலாமா' என, 2013ல் கணவரிடம் கேட்டேன். தட்டிக் கொடுத்தார்.
தரமான மூலப்பொருட்களில் செய்ததால், பல இடங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்தன. முதல் மூன்று ஆண்டுகளில் வரவு - செலவு சரியாக இருந்ததே தவிர, லாபம் இல்லை.
'கிராமத்து பொண்ணு உன்னால் அவ்ளோ தான் முடியும்' என்றவர்களை கண்டுகொள்ளாமல் உழைத்தேன்; தொழில் சிறிது சிறிதாக, 'பிக் அப்' ஆனது.
அதன்பின், என் தயாரிப்பு பொடிகளை அரைப்பதற்காக, வாடகை இடத்தில், 'ஷீரடி சாய் மாவு மில்' என்ற பெயரில், இயந்திரங்களை வாங்கி தொழில் ஆரம்பித்தேன்; இரண்டு பெண் ஊழியர்களை நியமித்தேன்.
என் தொழிலுக்கு மட்டுமல்லாமல், வெளி வாடிக்கையாளர்களுக்கும் அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு வந்து தொழில் முடங்கியது. நஷ்டத்தில் இருந்து மீண்டு வரவே ஓராண்டு ஆனது. நிலைமை சரியானதும் முன்பைவிட அதிக உழைப்பை போட்டு, மீண்டும் மார்க்கெட்டை பிடித்தேன்.
அப்போது, இந்த பகுதியில் யாரிடமும் இல்லாத சப்பாத்தி போடும் இயந்திரம், இடியாப்பம் பிழியும் இயந்திரம், ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ வரை மாவு அரைக்கும் இயந்திரங்கள், ஒரு மணி நேரத்தில் 200 கிலோ வரை கோதுமை அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி, ஊழியர்கள் எண்ணிக்கையை ஐந்து ஆக்கினேன்.
என் தயாரிப்பு பொருட்களுக்கு, 'அட்சயா புட்ஸ்' என்று பெயர் வைத்தேன்.
மிளகாய்த்துாள், கோதுமை, கடலை மாவு, உள்ளிட்ட 23 விதமான தயாரிப்புகளை விற்பனை செய்கிறேன். இணையதளம் வாயிலாக விற்பதுடன், திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கும் சப்ளை செய்கிறோம்.
கணவர் பலமாக நிற்க, இரவு நேரத்தில் மட்டும், 'சுவையில் டிபன் சென்டர்' என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறோம்.
இப்போது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.