/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தோல்விக்கு பின் வரும் வெற்றிக்கு அதிக பலம்!
/
தோல்விக்கு பின் வரும் வெற்றிக்கு அதிக பலம்!
PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

பிரபல, 'ஸோஹோ' நிறுவனத்தின், 'ஸ்டார்ட் அப்' திட்டத்தின் உலக அளவிலான தலைவராக இருக்கும் குப்புலட்சுமி: சேலம் தான் சொந்த ஊர். நடுத்தர குடும்பம். அப்பா ஹிந்தி ஆசிரியர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் நான் தோல்வி அடைந்தபோது, பெற்றோர் மிகவும் உடைந்து போயினர்; நண்பர்கள் விலகினர். நான் தனிமைக்குள் சென்றேன்.
அதுதான் நான் என்னை புரிந்து கொள்வதற்கான ஒரு துாண்டுதலாக இருந்தது. மறுதேர்வு எழுதி கல்லுாரியில் சேர்ந்தேன்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி முடித்தபின், குடும்ப சுமையை குறைக்க, கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்து, என் தங்கையை படிக்க வைத்தேன்.
சர்வதேச மென்பொருள் நிறுவனமான ஸோஹோவில், 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு டிரெய்னராக தான் சேர்ந்தேன். சிறிது சிறிதாக சாப்ட்வேர் கற்றுக்கொண்டேன். இப்போது, நிறுவனத்தின் பிரதிநிதியாக, 15 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்.
தற்போது, கார்ப்பரேட் கம்பெனிகளில் திறமை உள்ளவர்களை தான் பணிக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.
அதேபோல இளம் தலைமுறையினர், ஒரு வேலையில் சேரும்போது அந்த நிறுவனத்தின் தன்மை, தேவை என எல்லாவற்றையும் தெரிந்து, அதற்கேற்ப தங்களின் திறன்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். வேலையில் சுய ஒழுக்கம் மிக முக்கியம்.
அப்பா, அம்மா, தங்கை என அன்பான குடும்பம் என்னுடையது. சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழ்நிலையை பார்த்திருக்கிறோம்.
உடையில் இருந்து புத்தகங்கள் வரை மற்றவர்கள் பயன்படுத்தியதை தான் நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். சிறிது சிறிதாக முன்னேறினோம்.
ஆனால், 2013ல் ஒரு விபத்தில் என் பெற்றோரை இழந்து விட்டேன். நான், நல்ல வாழ்க்கை வாழும்போது, அவர்கள் என்னுடன் இல்லை. அந்த வெற்றிடத்தை என் கணவர் நிரப்புகிறார்.
இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. பெண்ணுக்கான வேலை, ஆணுக்கான வேலை என எங்கள் வீட்டில் எதுவும் இல்லை.
குறிப்பாக, குழந்தை வளர்ப்பில் பொறுப்புகளை பகிர்ந்து கொள்கிறோம். வேலை விஷயமாக நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, வீட்டையும், குழந்தையையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.
தோல்விகளை சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் சில வார்த்தைகள்... தோல்வி, உங்களை எக்காரணம் கொண்டும் முடக்கிவிடக் கூடாது. தோல்விக்கு பின் வரும் வெற்றிக்கு அதிக பலம் இருக்கிறது.
அது, தோல்வி குறித்த வரையறைகளை உடைத்து போடும் உளி. தோல்வியில் இருந்து ஒரு வெற்றியாளராக உருவாக உங்களுக்கு தேவை, சுய ஒழுக்கமும், சுய உந்துதலும்தான்!