PUBLISHED ON : ஜூன் 23, 2025 12:00 AM

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த, நிஷா உன்னிராஜன்: பெற்றோருக்கு ஒரே மகள், நான். பி.டெக்., 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனி கேஷன்' படித்து முடித்து, திருவனந்தபுரம் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையில், 'அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீசர்' ஆக, 11 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன்.
கணவர் சாப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறார். எனக்கு இரு குழந்தைகள்.
சிறு வயது முதலே எனக்கு, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால், வேறு வேலையில் சேர்ந்ததால் அது முடியவில்லை. திருமணத்துக்கு பின், 'சிவில் சர்வீஸ்' தேர்வு எழுதலாம் என்ற ஆசை துளிர்த்தது.
முதல் தேர்வு, 2011ல் எழுதினேன். இடைவெளிகள் விட்டு, ஆறு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தேன். ஏழாவது முறையாக தற்போது வெற்றி பெற்றிருக்கிறேன்.
ஏற்கனவே எனக்கு மத்திய அரசு பணி இருக்கிறது. எனவே நான் நினைத்திருந்தால் தேர்வு எழுதாமல் அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், என் மகள்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும் என்று விரும்பினேன்.
வேலை, குடும்பம், குழந்தைகள் என கவனித்தபடியே இருந்ததால், படிப்பதில் சிரமம் இருந்தது. பணி நிமித்தமாக, ரயிலில் திருவனந்தபுரம் செல்ல, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதுமட்டுமே எனக்கு படிப்பதற்காக கிடைக்கும் நேரம்.
எப்போதும் என் இரு மகள்களும் என்னை, 'மோட்டிவேட்' செய்தபடியே இருப்பர். நான் சோர்வாக இருப்பதை கவனித்து, நான் படிக்கும் புத்தகத்திற்குள் சிறிய பேப்பரில், 'மோட்டிவேஷன்' கருத்துக்களை எழுதி வைப்பர்.
நான் புத்தகத்தை புரட்டும்போது, அந்த கருத்துக்களை படிப்பேன். அவையே எனக்கு அதிக உத்வேகத்தை கொடுத்தன. '40 வயதில் இது தேவையா...' என பலர் கிண்டல் செய்தாலும், அதுகுறித்து கவலைப்படாமல் முன்னேறிச் சென்றேன்.
'இன்னும் ஒருமுறை தேர்வு எழுதி பாரேன்' எனக் கூறி, பக்கபலமாக இருந்து உற்சாகமும், நம்பிக்கையும் கொடுத்தது கணவர் தான்.
'இந்தியா முழுதிலும் நமக்கு போட்டி உண்டு' என்பதையும், 'நம்மை விட தரமான போட்டியாளர்களுடன் தேர்வு எழுத போகிறோம்' என்ற எண்ணமும் இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் விட, மன உறுதி அதிகமாக இருக்க வேண்டும்.
பள்ளிப்படிப்பில் நான் சுமாரான மாணவி தான். கல்லுாரியிலும், 'ரேங்க்' எடுத்ததே இல்லை. நான் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை பார்த்துவிட்டு வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களுக்கு கூட ஆச்சரியம் தான்.
1,000வது ரேங்க் பெற்றதால் எந்த இடத்தில் பணி ஒதுக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை. என்ன வேலை கிடைத்தாலும், ஐ.ஏ.எஸ்., தான் என் இலக்கு!