/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆறாத கேரியரில் அதிகாரிகளுக்கு அன்னதானம் பார்சல்!
/
ஆறாத கேரியரில் அதிகாரிகளுக்கு அன்னதானம் பார்சல்!
PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

நண்பர்கள் மத்தியில் அமர்ந்ததுமே, பேச ஆரம்பித்த பெரியசாமி அண்ணாச்சி, “ஆவடி, கவரப்பாளையம் டி.ஆர்.ஆர்., நகர் பக்கத்துல சி.டி.எச்., சாலையை தனியார் கார் நிறுவனம் ஆக்கிரமிச்சிருக்குன்னு போன 21ம் தேதி பேசியிருந்தோமுல்லா...
“இதை பார்த்த நெடுஞ்சாலை மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்க போய், கார்களை எல்லாம் அப்புறப்படுத்திட்டு, தடுப்புகள் போட்டதும் இல்லாம, 'இங்கு வாகனங்கள் நிறுத்த கூடாது'ன்னு போர்டும் வச்சுட்டாவ வே...” என்றார்.
உடனே, “இடமாறுதல் போட்டு பழிவாங்குறாங்கன்னு புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“சிறை துறையில் ஒரே இடத்துல பல வருஷமா பணியில இருக்கிற சிறை காவலர்கள், வெளிமாவட்ட சிறைகளுக்கு இடமாறுதல் செய்யப்படுவாங்க... வழக்கமா, பக்கத்து மாவட்டத்துக்கு தான் மாத்துவாங்க பா...
“ஆனா, இப்ப பல 100 கி.மீ., தள்ளியிருக்கிற சிறைகளுக்கு மாத்துறாங்க... இதனால, பாதிக்கப்பட்ட சிறை காவலர்கள், சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளுக்கு கடிதம் அனுப்பியிருக்காங்க பா...
“அதுல, 'தலைமை இடத்தில் கோலோச்சும் அமைச்சு பணியாளர்கள் சிலரை, சிறை அதிகாரிகள் தங்களுக்கு சாதகமா வளைச்சு, உங்களுக்கே தெரியாம இந்த இடமாறுதல்களை பண்றாங்க'ன்னு புலம்பியிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“மகளின் கண்ணீரை துடைங்கன்னு கேட்டிருக்காங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“கொரோனா காலத்துல பணியில் இருந்த அரசு டாக்டர் விவேகானந்தன் கொரோனா பாதிப்புல இறந்து போயிட்டாரே... அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க கோர்ட் உத்தரவிட்டும், ரெண்டு வருஷமா வேலை தரலைங்க...
“சமீபத்துல, அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தர்ணா நடத்துனாங்க... இதுல, விவேகானந்தன் மனைவியும், குழந்தை கீர்த்தனாவும் கலந்துக்கிட்டாங்க...
“கீர்த்தனா பேசுறப்ப, 'கொரோனா சமயத்துல எங்க அப்பா மட்டும், ரெண்டு மாசம் லீவு போட்டிருந்தா, இன்னைக்கு எங்களுடன் இருந்திருப்பாரு... இந்த அரசும் எங்களை கண்டுக்காம இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு...
“மாணவ - மாணவியர், தன்னை அப்பான்னு அழைக்கிறது மகிழ்ச்சியா இருக்குன்னு முதல்வர் சொல்றாரு... அதனால, முதல்வர் அப்பா, எங்க பிரச்னையையும் தீர்க்கணும்'னு கண்ணீர் மல்க பேசியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“அன்னதானம் கேரியர்ல போறது ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“திருப்பூர்ல இருக்கற விஸ்வேஸ்வர சுவாமி கோவில்ல, தினமும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கறா... அறநிலைய துறை உதவி கமிஷனர் அலுவலகம், 300 மீட்டர் தள்ளியிருக்கற வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்துல இயங்கறது ஓய்...
“இங்க இருக்கற அதிகாரிகளுக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவில் அன்னதானத்தை கேரியர்ல எடுத்துண்டு போறா... இதுக்கு முன்னாடி, அதிகாரிகள் அந்த கோவில்ல போய்தான் சாப்பிட்டா ஓய்...
“ஆனா, பக்தர்கள் மத்தியில உட்கார்ந்து சாப்பிட அதிகாரிகள் கவுரவம் பார்க்கறதால, இப்ப, 'ஹாட் பாக்ஸ் கேரியர்' வாங்கி, அதுல எடுத்துண்டு போயிடறா... ஒருபக்கம் பக்தர்களுக்கு சாப்பாடு இல்லன்னு வாக்குவாதம் நடக்கறது... மறுபக்கம் இப்படி பார்சல் போறது ஓய்...” என, முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.