/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கலெக்டர் உதவியாளர் பதவியால் வெடித்த சர்ச்சை!
/
கலெக்டர் உதவியாளர் பதவியால் வெடித்த சர்ச்சை!
PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

''கட்சியின் டில்லி முகம்னு பாராட்டியிருக்காருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''தி.மு.க., தகவலா வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஆமா... தொகுதி மறுவரையறைக்கு எதிராக, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்துல, ஏழு மாநிலங்களைச் சேர்ந்த, 14 கட்சி தலைவர்கள் பங்கேற்றாங்களே...
''இந்த தலைவர்களை எல்லாம், தி.மு.க.,வின் அமைச்சர்களும், எம்.பி.,க்களும் நேர்ல போய் அழைச்சாங்க... 2007ல் இருந்து தொடர்ந்து, 18 வருஷமா டில்லியில் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,யா கனிமொழி வலம் வர்றதால, வடமாநில தலைவர்களுடன் நல்ல நட்புல இருக்காங்க...
''இதனால, கனிமொழி அழைப்பை ஏற்று, அவங்களும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்துல பங்கேற்றாங்க...
''இந்த கூட்டத்துக்கு வடமாநில செய்தி சேனல்கள் பெரிய அளவுல முக்கியத்துவம் தந்ததை கேள்விப்பட்டு, முதல்வர் ரொம்பவே உற்சாகம் ஆகிட்டாருங்க... சீனியர் அமைச்சர் ஒருத்தரிடம், 'கட்சியின் டில்லி முகம் இனி கனிதான்'னு சொல்லி சந்தோஷப்பட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அமைச்சர் தரப்பு கண்டுக்காம போயிட்டதால, 'சைலன்ட்' ஆகிட்டாங்க...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கரூர் மாநகராட்சி மேயரா, தி.மு.க.,வைச் சேர்ந்த கவிதா இருக்காங்க... இவங்களுக்கும், மாநகராட்சி கமிஷனரான சுதாவுக்கும் நிர்வாகம் தொடர்பா, கருத்து வேறுபாடு வந்துடுத்து ஓய்...
''கரூர் வடக்கு நகர செயலரா இருக்கற மேயரின் கணவர் கணேசன், நிர்வாகத்துல தலையிடறார்னு கமிஷனர் தரப்பு கோபத்துல இருக்கு... ஒரு கட்டத்துல வெறுத்துப் போன மேயர், தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, 'பிரஸ் மீட்'டுக்கும் ஏற்பாடு பண்ணிட்டாங்க ஓய்...
''ஆனா, அந்த நேரம் பார்த்து, மாவட்டச் செயலரும், அமைச்சருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகள்ல அமலாக்கத் துறை சோதனை நடக்கவே, பிரஸ் மீட்டை கேன்சல் பண்ணிட்டாங்க...
''இருந்தாலும், தகவலை கேள்விப்பட்டு அமைச்சர் தரப்புல இருந்து தன்னை சமாதானப்படுத்துவான்னு மேயர் தரப்பு நினைச்சது... ஆனா, அமைச்சர் தரப்பு கண்டுக்காததால, மேயரும் ராஜினாமா முடிவை கைவிட்டுட்டு, கமுக்கமா இருந்துட்டாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''புதிய பதவியால சர்ச்சை வெடிச்சிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''மாவட்டங்கள்ல கலெக்டர்களுக்கு துறை வாரியாக, பல நேர்முக உதவியாளர்கள் இருப்பாங்க... கல்வித்துறையை கண்காணித்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில், பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஒரு நேர்முக உதவியாளரை, சமீபத்துல எல்லா மாவட்டங்கள்லயும் நியமிச்சாங்க பா...
''ஆனா, மதுரையில் மட்டும் பட்டதாரி ஆசிரியருக்கு பதிலாக, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு அந்த பதவியை வழங்கியிருக்காங்க... இதனால, 'நேர்முக உதவியாளர் பதவி உரிமை எங்களுக்கு வேண்டும்'னு பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் போர்க்கோடி துாக்கியிருக்காங்க பா...
''ஆனா, பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரியோ, 'அதெல்லாம் இல்ல... முதுகலை பட்டதாரி தான் இருக்கணும்'னு அடம் பிடிக்கிறாரு... இதனால, பட்டதாரி ஆசிரியர்கள் எல்லாம் பல்லை நறநறன்னு கடிச்சிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.