/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கலந்தாலோசகர்களை காலி பண்ணும் சி.எம்.டி.ஏ.,!
/
கலந்தாலோசகர்களை காலி பண்ணும் சி.எம்.டி.ஏ.,!
PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''ஒரே கட்சி சார்புல, ரெண்டு இப்தார் விருந்து வச்சிருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''நோன்பு காலத்துல, வழக்கமா எல்லா அரசியல் கட்சிகளுமே இப்தார் விருந்து நடத்தும்... இந்த வகையில, தி.மு.க.,வின் தலைமை நிலைய செயலரான துறைமுகம் காஜா ஏற்பாட்டுல, சென்னை, திருவான்மியூர்ல இப்தார் விருந்து நடந்துச்சு... இதுல, முதல்வர் ஸ்டாலினும் கலந்துக்கிட்டாரு பா...
''அடுத்து, தி.மு.க., சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில செயலர் டாக்டர் சுபேர்கான் ஏற்பாட்டுல, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடல்ல ஒரு இப்தார் விருந்து நடத்துனாங்க... இதுல, துணை முதல்வர் உதயநிதி கலந்துக்கிட்டாரு பா...
''அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வருதே... சிறுபான்மையினர் ஓட்டுகளை ஆளுங்கட்சிக்கு ஆதரவா வளைக்கவே, இப்படி போட்டி போட்டுட்டு இப்தார் விருந்துகளை நடத்துறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஊழியர்கள் அஞ்சு பேரை பழிவாங்கிட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலின், 100 கோடி டிபாசிட் தொகையில இருந்து, ஊட்டியில் ரிசார்ட்கள் கட்ட, அறநிலையத் துறை முயற்சி எடுத்துது... இதை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்கு போக, அறநிலையத் துறை போட்ட அரசாணையை வாபஸ் வாங்கிட்டு வே...
''இந்த தகவல் வெளியில கசிய, கோவில்ல பணியாற்றும் அஞ்சு ஊழியர்கள் தான் காரணம்னு நினைச்ச அறநிலையத் துறை அதிகாரிகள், அவங்களை 'டம்மி' பணிக்கு துாக்கி அடிச்சுட்டாவ... அதாவது, 25 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த கோவிலின் தலைமை அர்ச்சகரை, தேங்காய் உடைக்கும் இடத்துக்கு அனுப்பிட்டாவ வே...
''அதேபோல, நேர்மையான விதவை கண்காணிப்பாளரை சமையலறை டூட்டிக்கு மாத்திட்டாவ... ஆனா, நிஜமாவே ரிசார்ட் தகவல் வெளியில கசிந்த விவகாரத்துல, இவங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையாம்... அதிகாரிகளே யூகமா அதிரடி நடவடிக்கை எடுத்திருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கலந்தாலோசகர்கள் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''புதிய கட்டடங்கள், அடுக்குமாடி கட்டுமானத்துக்கு அனுமதி வழங்க, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., இருக்கோல்லியோ... இதுல குறிப்பிட்ட புதிய திட்டங்கள் துவங்கறச்சே, கலந்தாலோசகர்கள் யோசனையை கேட்டுப்பா வே...
''கடந்த, 2021ல் சி.எம்.டி.ஏ.,வுக்கு மெம்பர் செகரட்டரியா வந்த அன்சுல் மிஸ்ரா, ஏகப்பட்ட வெளியாட்களை கலந்தாலோசகர்களா ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தினார்... எந்த வரைமுறையும் இல்லாம இவாளுக்கு சம்பளம் கொடுத்தாலும், இவா யாரும் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இல்ல ஓய்...
''மெம்பர் செகரட்டரியின் நேரடி கட்டுப்பாட்டுல இருந்ததால, இவாளது அதிகாரம் கொடிகட்டி பறந்துது... இந்த சூழல்ல, அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டு, பிரபாகர் ஐ.ஏ.எஸ்., புது மெம்பர் செகரட்டரியா வந்திருக்கார் ஓய்...
''இவர், 'எந்த பொறுப்பும் இல்லாம ஏன் இத்தனை பேர் இருக்கா'ன்னு கேட்டிருக்கார்... இதனால, பிரிவு வாரியா ஆய்வுக் கூட்டம் நடத்தி, தேவையில்லாத கலந்தாலோசகர்களை வீட்டுக்கு அனுப்பப் போறா... இதை கேள்விப்பட்டு, ஆட்டம் போட்டவா நடுக்கத்துல இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.