/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கல்லுாரி விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க எதிர்ப்பு!
/
கல்லுாரி விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க எதிர்ப்பு!
PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM

நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''சொந்த ஊர்ல இருந்துண்டு, மிரட்டறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை வணிக வரித்துறையில் ஒரு அதிகாரியை பார்த்தா, எல்லாரும் அலறாத குறையா ஓட்டம் பிடிக்கறா... பொதுவா, துறையின் முக்கிய உயர் அதிகாரிகளுக்கு, சொந்த மாவட்டத்தில், 'போஸ்ட்டிங்' போட மாட்டா ஓய்...
''ஆனா, அதை எல்லாம் மீறி, துணை கமிஷனர் அந்தஸ்துல, தன் சொந்த மாவட்டத்துக்கு இந்த அதிகாரி வந்திருக்கார்... தன்னை விட வயதில் மூத்த அதிகாரிகள், ஊழியர்களை கூட பெயர் சொல்லி, ஒருமையில் தான் அழைக்கறார் ஓய்...
''தனக்கு உயர் அதிகாரிகளா இருக்கறவா அறைகளை ஆக்கிரமிச்சு, அவா சீட்ல உட்கார்ந்துக்கறார்... அங்க வர்ற அதிகாரிகள், ஊழியர்களையும் ஏக வசனத்துல எடுத்தெறிஞ்சு பேசறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
'மகேஷ் காலிங்' என, வந்த போன் அழைப்பை துண்டித்த பெரியசாமி அண்ணாச்சி ''ஆன்லைன் மூலமா வசூல் பண்ணுதாரு வே...'' என்று தொடர்ந்தார்...
''முதல்வரின் சென்னை கொளத்துார் தொகுதியில், செகரட்டரியேட் காலனி மின் வாரிய அலுவலகம் இருக்கு... இங்க ஒரு அதிகாரி, ஆன்லைன்ல வசூல் செய்யிறதுக்காக தனியா மொபைல் போன் நம்பர் வாங்கி, வேட்டை நடத்துதாரு வே...
''மின் இணைப்பு மற்றும் மின் தடை குறித்த பொதுமக்களின் புகார்களை காது கொடுத்து கூட கேட்க மாட்டாரு... அதே நேரம், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான புகார்களுக்கு மட்டும் முன்னுரிமை தர்றாரு வே...
''அரசு குடோன்ல இருந்து எடுத்துட்டு வர்ற மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் மீதமானா, அவற்றை புதிய லட்சுமிபுரம் ஜோதி நகர்ல ஒரு வீட்டுல பதுக்கி வச்சு, ஒரு மாசம் கழிச்சு வித்துடுதாரு...
''மழைநீர் வடிகால் உள்ளிட்ட மற்ற துறைகளின் பணிகள் நடக்கிறப்ப, மின் இணைப்பு மற்றும் மின் கம்பங்கள் சேதமாகிட்டா, அந்த வேலையை செய்த பொக்லைன் உரிமையாளர்களை கூப்பிட்டு, 'போலீசில் புகார் குடுத்துடுவேன்'னு மிரட்டி, ஒரு தொகையை கறந்துடுதாரு... இவரை பத்தி நிறைய புகார்கள் போயும், உயர் அதிகாரிகள் கண்டுக்கல வே...'' என்றார், அண்ணாச்சி.
''வேலுச்சாமி இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''கல்லுாரி விழா சர்ச்சையை ஏற்படுத்திடுச்சுங்க...'' என்றார்.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திண்டுக்கல்லில் இருக்கிற புகழ் பெற்ற தன்னாட்சி கல்லுாரியின் ஆண்டு விழா, போன வாரம் நடக்க இருந்துச்சு... மூத்த அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக்க இருந்தாங்க...
''ஆனா, கல்லுாரி நிர்வாகம் மீது எழுந்த சில புகார்களால, விழாவை தள்ளி வச்சுட்டாங்க... இந்த கல்லுாரியை, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் மற்றும் ஏழை, எளியவங்க படிக்கத் தான் துவங்கினாங்க...
''ஆனா, கல்லுாரி அறக்கட்டளையில் வெளியாட்கள் சிலர் புகுந்து, கூடுதல் கட்டண நிர்ணயம் உட்பட பல குளறுபடிகளை செய்றாங்க... இது பத்தி விசாரிக்கணும்னு கவர்னர், முதல்வர், உயர் கல்வி அமைச்சருக்கு, அந்த சமுதாயத்தினர் புகார் அனுப்பி இருக்காங்க...
''இதுக்கு இடையில, தள்ளி வைக்கப்பட்ட ஆண்டு விழா நாளைக்கு நடக்க இருக்கு... 'இதுல, அமைச்சர்கள் யாரும் கலந்துக்கக் கூடாது... இதை மீறி கலந்துக்கிட்டா, சட்டசபை தேர்தல்ல எங்க ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்காது'ன்னு அந்த சமுதாயத்தினர் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.