PUBLISHED ON : அக் 30, 2024
காட்டில் குடும்பத்துடன் வசித்தார் முனிவரான தீர்க்கதமஸ். இருட்டு, மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களால் துன்பத்திற்கு ஆளானார். ஒருமுறை அப்பகுதிக்கு முனிவரான சனாதனர் வந்தார். அவரிடம், 'துன்பம் என்னும் இருளில் இருந்து விடுபட மனிதன் விரதம் இருக்கிறான். விரதம், தவத்தால் மேலும் துன்பத்திற்கு ஆளாகிறான். மகிழ்ச்சியுடன் வாழ வழி இல்லையா? எனக் கேட்டார்.
அதற்கு சனாதனர், 'விரதத்தால் மட்டுமே ஒளிமயமான கடவுளைக் காணமுடியும் என வேதம் சொல்லவில்லை. நீராடி, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை சாப்பிட்டு, ஏழைகளுக்கு தானம் கொடுத்து, விளக்குகள் ஏற்றி கொண்டாடினாலும் துன்ப இருளில் இருந்து விடுபடலாம் என போதித்தார்.
இந்த விழாவை எப்போது கடைபிடிக்கலாம் எனக் கேட்க, ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி அன்று தீபம் ஏற்றி எமதர்மனை வழிபட்டால் அகால மரணம் ஏற்படாது. மறுநாள் நரக சதுர்த்தசியன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், அங்கு துன்பப்படுபவர்கள் விடுபடவும் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்துாள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். பின் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
எண்ணெய்யில் மகாலட்சுமியும், அரப்பு பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமி தேவியும், குங்குமத்தில் பார்வதியும், நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரமாத்மாவும் அருள்பாலிப்பார்கள். அவர்கள் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி ஒளியின் பாதையில் நம்மை வழிநடத்துவார்கள்'' என்றார்.
அதன்படி காட்டில் வாழ்ந்த தீர்க்கதமஸ் முனிவர் தொடங்கிய விழாவே தீபாவளியானது. நரகாசுரன் கதையோடு இப்படியும் ஒரு புராணக் கதை இருக்கிறது.