
அதிராமகுப்பம் கிராமத்தில் வசித்தார் மீனவர் மாரியப்பன். குளிர்சாதன பெட்டி வசதி இல்லாத காலம் அது. கடலில் நீண்ட துாரம் சென்றால் தான் நிறைய மீன் வகைகள் பிடிக்க முடியும். இதை அறிந்து புறப்பட்டார்.
பல மணி நேரம் படகில் பயணித்து, நடுக்கடலுக்கு வந்தார். அதிக அளவு மீன்களை பிடித்தார். நீண்ட நேரம் கடலில் தங்கியதால் ஒரு பிரச்னை ஏற்பட்டது. கரை சேரும் முன், மீன்கள் இறந்தன. சில உலர்ந்திருந்தன; அழுகி, கூடவே துர்நாற்றமும் வீசியது.
பிரச்னையை தீர்க்கும் வகையில் முயன்றார். உரிய வழிமுறையில் சிந்தித்தார். படகில் செயற்கை நீர்தேக்கம் ஒன்றை உண்டாக்கினார். கடலில் பிடித்து மீன்களை அதில் போட்டு உயிருடன் எடுத்து வந்தார்.
இம்முறையில் சிறிது வெற்றி கிட்டியது. பிடிபட்ட மீன்கள் இறக்கவில்லை; இருப்பினும், அவற்றை முறையாக பராமரிக்க முடியவில்லை.
மறுமுறை பயணத்தின் போது புத்திசாலித்தனமாக ஒரு வழி கண்டுபிடித்தார். மீன்கள் அடைபட்டிருந்த நீர்தேக்கத்தில், ஒரு குட்டி சுறாவை இட்டார். சுறாவிடமிருந்து உயிர் தப்ப, எப்போதும் நீந்தியபடி இருந்தன பிடிபட்ட மீன்கள்.
எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்ததால், கரைக்கு வரும் வரை பிடிபட்ட மீன்களின் துடிப்பு குறையவில்லை. வியாபாரம் பல்கிப் பெருகியது. இந்த வியூகத்தை பின்பற்றி ஏனைய மீனவர்களும், லாபம் அடைந்து மகிழ்ந்தனர்.
பட்டூஸ்... வாழ்க்கையில் பிரச்னை வரும்; அதை மனவலிமையுடன் எதிர் கொள்ள தயாராக இருந்தால் வெற்றி பெறலாம்!
- வி.சி.கிருஷ்ணரத்னம்