
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 17; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் நண்பன், எப்போதும், கேரளாவை பற்றி பெருமையாக பேசுவான். ஒரு நாள், அவன் இனிப்பு பதார்த்தமான பாயசங்களை கண்டுபிடித்தது கேரளா தான் என பிடிவாதமாக கூறினான். அவன் கூறுவது தான் சரி என ஒற்றைக்காலில் நின்றான்.
எந்த பதிலையும் ஏற்கும் மனநிலை அவனிடம் இல்லை. பாயசம் குடிக்கும் எல்லாரும், கேரளாவுக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமாம். அவன் சொல்வது உண்மையா ஆன்டி... இது பற்றி விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
வி.அம்ரேஷ் காத்தான்.
அன்பு மகனுக்கு...
இனிப்பு பதார்த்தங்களின் ராணி பாயசம். பாயசங்களின் ராஜா கேரளாவின் அடபிரதமன்.
பாயசம் ஒரு நிறைப்பு உணவு. கி.மு., 400ல் கண்டெடுக்கப்பட்ட புத்தஜெயின் எழுத்துப் பிரதியில், பாயசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கால கட்டத்தில், பாயசத்தை, 'பாயாஸ்' என்றிருக்கின்றனர்.
புத்தர், ஏழு ஆண்டு உண்ணாவிரதத்தை, ஒரு கிண்ணம் பாயசம் குடித்து தான் வயிற்றை குளிர்த்துவிள்ளார். அதில், 'கீர்' எனப்படும் பாயசம் மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து, கேரளாவுக்கு கடல் வழியாக வந்திருக்கலாம்.
உன் கேரள நண்பன் பாயசத்துக்கு காப்புரிமை கொண்டாடுவது தவறு. மிக மிக சிறப்பான பாயசங்கள், ஓணம் பண்டிக்கை விருந்தில் பரிமாறப்படுகிறது.
பாயசம் பற்றிய உபரி தகவல்களை கூறுகிறேன் கேள்...
பாயசத்தில் பல வகைகள் உள்ளன!
அவை...
பால் பாயசம், மசாலா பாயசம், வெல்ல பாயசம், தேங்காய் பால் பாயசம், பயித்தம் பருப்பு கடலை பருப்பு பாயசம், குருணை பாயசம், சம்பா கோதுமை ரவை பாயசம், தினையரசி பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரசி பாயசம், அவல் பாயசம், காரட் பாயசம், முட்டை கோஸ் பாயசம், சவ்சவ் பாயசம், பரங்கிக்காய் பாயசம், பூசணிக்காய் பாயசம், உருளைக்கிழங்கு பாயசம், இளநீர் பால் பாயசம், பன்னீர் பாயசம், பூரி பாயசம், பாலடை பிரதமன், கோதுமை மாவு பாயசம்.
இது தவிர, இஸ்லாமிய திருமண விருந்துகளில் பரிமாறப்படும் பீர்னி, மாம்பழ பாயசம், சக்கப்பிரதமன் எனப்படும் பலாப்பழ பாயசம், பைனாப்பிள் பாயசம், ஓட்ஸ் பாயசம், புளி பாயசம், பாகற்காய் பாயசம் எல்லாம் உண்டு.
ஐயப்பன் கோவில்களில், பிரசாதமாய் அரவண பாயசம் வழங்குகின்றனர். கேரளா அம்புல புழா கோவிலில், பிரசாதமாய் பாயசமே தருகின்றனர். ஒரிசாவில், கோனார்க் கோவிலில் கோய்ன்ட்டா கோடி எனப்படும் பாயசத்தை பிரசாதமாக தருகின்றனர்.
பாயசம், இளம்சிவப்பு, பச்சை, மஞ்சள், துாய வெள்ளை நிறங்களில் பரிமாறப்படுகிறது. நெய், உலர் திராட்சை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பால் சேர்க்கப்படுகிறது.
பாயசம் எங்கிருந்து வந்தால் என்ன...
ஒரு கோப்பை பலாப்பழ பாயசம் குடித்து, வாழ்வை கொண்டாடுவோம்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.