PUBLISHED ON : ஜூன் 15, 2025

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 25 வயது பெண். எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. ஒரே கல்லுாரியில் படித்தவர்கள் நானும், கணவரும். கல்லுாரியில் படிக்கும்போதே காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.
நான், வேலைக்கு செல்லவில்லை. வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிகிறார், கணவர்.
கணவருக்கு, ஒரு தம்பியும், தங்கையும் உண்டு. தங்கைக்கு வரன் பார்த்து வருகின்றனர். தம்பிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
எனக்கு ஒரு அண்ணன் மட்டும் உண்டு. அவருக்கும் திருமணமாகி விட்டது.
மாமனார் - மாமியார், நாத்தனார் அனைவரும் என்னை நல்லபடியாக கவனித்து வருகின்றனர். எனக்கு, ஒரே பிரச்னை, என் மச்சினன் தான். பட்டப்படிப்பு படித்திருப்பவன், வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றி வருகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், என்னை சீண்டுவான்.
வேண்டுமென்றே என் மீது கை வைப்பது, இடிப்பது என, இருப்பான். முறைத்து பார்த்தால், தெரியாமல் நடந்து விட்டதாக கூறி, சென்று விடுவான். நான் சமைக்கும் போது, துணி துவைக்கும் போது, தன் மொபைல் போனில் போட்டோ எடுப்பான். இதை அறிந்ததும், கடுமையாக கண்டித்தேன்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், 'உன்னை முதன் முதலில் பார்த்த போதே, உன் மீது காதல் வந்து விட்டது. ஒருமுறையாவது உன்னை அடைந்தே தீருவேன்...' என்றெல்லாம் உளறுவான்.
இதைக் கேட்டதும், அதிர்ச்சியாகி விட்டது.
'நான் உன் அண்ணி. அண்ணனுக்கு தெரிந்தால் உன் நிலைமை என்ன ஆகும் தெரியுமா?' என, மிரட்டியும் விட்டேன்.
அவனது பார்வையும், நடவடிக்கையும் மாறவே இல்லை.
இதை எப்படி, கணவரிடம் சொல்வது என, தெரியவில்லை. மாமனார் - மாமியாரிடம் சொல்லலாம் என்றால், தங்கள் இளைய மகன் மீது, மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். நான் சொல்வதை நம்புவரா என்றும் தெரியவில்லை.
'தங்கைக்கு வரன் பார்க்கும் போது, தம்பிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம்...' என, யோசனை கூறினேன். அதற்கும் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கு என்ன செய்வது என, தெரியவில்லை; நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உறவு வட்டத்திற்குள் நிகழும் பாலியல் வன்முறைகள், உணர்வுரீதியான மற்றும் மனோதத்துவ ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும்.
அண்ணனின் மனைவியை இரண்டாம் தாயாய் பாவிக்கும் கொழுந்தன்கள் பலர், தமிழகத்தில் உள்ளனர். உன் கொழுந்தன், ஒரு விதிவிலக்கு.
நெருங்கிய உறவு வட்டத்திற்குள் நிகழும் பாலியல் வன்முறைகளை, பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்வதில்லை. இதனால், கூடுதல் தைரியம் பெற்ற பாலியல் வன்முறையாளர்கள், அடுத்தடுத்த கட்டங்களுக்கு அத்துமீறுகின்றனர்.
மச்சினன் விஷயத்தில், நீ செய்ய வேண்டியவைகளை கூறுகிறேன்...
* மச்சினன் உன்னிடம், தேவையில்லாத வார்த்தைகளை உதிர்க்கும் போது, அவனுக்கு தெரிந்தோ, தெரியாமலோ வீடியோ எடு
* அவனும், நீயும் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை திட்டமிட்டு தவிர்
* அவன், உன்னிடம் அத்துமீற முயன்றால், கனமான கரண்டியால், கிரிக்கெட் பேட்டால், கட்டையால் தாக்கு. தாக்குதலில் அவன் மரணக்காயம் பட்டுவிடக் கூடாது. சிறிதாய் ரத்தக்காயம் ஏற்படட்டும்
* அவன் அசந்திருக்கும் போது, அவனின் மொபைல் போனை எடு. தரையில் போட்டு உடை அல்லது அவன் உன்னை வீடியோ எடுத்திருப்பதை கணவரிடம், மாமனார் - மாமியாரிடம் காட்ட பத்திரப்படுத்து
* தனியாக வந்து அவன் பல்லிளித்தால், 'விலகிப் போய் விடு. இல்லை என்றால் குடும்ப அங்கத்தினர் அனைவரிடமும், உன் துர்நடத்தையை கூறி, வாலை கத்தரித்து விடுவேன்...' என, எச்சரி.
* உன்னுடைய எச்சரிக்கைகளை கொழுந்தன் மீறினான் என்றால்-, உன் பெற்றோரை, உன் மாமனார் - மாமியாரை, கணவரை மற்றும் நாத்தனாரை முன்வைத்து, கொழுந்தனின் அத்துமீறல்களை போட்டு உடை.
இருதரப்பு வீடியோ ஆதாரங்களை காட்டு.
மாமனாரும், கணவரும் அவனை அடித்து துவைத்தால் குறுக்கிடாதே.
புகுந்த வீட்டார், கொழுந்தனை வெளியே விரட்டி, வேலை தேடி சுயமாய் பிழைத்துக் கொள் என, தண்டித்தால் மகிழ்ச்சி அல்லது அவனுக்கு திருமணமாகி போகும் வரை, கணவருடன் தனிக்குடித்தனம் போய் விடு.
பின்னாளில் அவனே தன் துர்நடத்தைக்கு வெட்கப்பட்டு, உன்னிடம் மன்னிப்பு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பழி வாங்கும் வெறியை தொடர்ந்தான் என்றால், தகுந்த தடுப்பாட்டம் ஆடு.
கொழுந்தன் வீட்டைவிட்டு வெளியேறியவுடன் நிம்மதியாக இரு.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்