PUBLISHED ON : ஜூலை 06, 2025

நாட்கள் விரைவாக பறக்கின்றன. இன்னும், இரண்டு நாட்களில் வேலையை முடிக்க வேண்டும்.
கணினியை வேகமாக இயக்கினாள், அனன்யா. பிரவுசர், அவள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தள்ளாடியது.
''லெமன் டீ சாப்பிடலாமா? தேன் போட்டிருக்கேன்,'' என, மேசை மேல் வைத்து புன்னகைத்தான், திவாகர்.
''ஓ தாங்க் யூ, திவா. இப்ப எனக்கு ரொம்ப தேவைப்படுகிறது,'' என, உடனே எடுத்து பருகினாள், அனன்யா.
''நல்ல சூட்டுல இருக்கு. அவசரப்படாமல் குடி. ரெண்டு நாளாவே பரபரப்பா இருக்கியே என்ன?''
''மகளிர் தினம் ஸ்பெஷல் கட்டுரை எழுதணும், திவா. 10 ஆளுமைகளை நேர்காணல் செஞ்சு வரிசைப் படுத்தணும். ஒன்பது பேர் வேலை முடிஞ்சது.
''சுயதொழில், பாங்க் மானேஜர், மேக் - அப் ஆர்டிஸ்ட், சிவில் இன்ஜினியர், டாக்டர், மஷ்ரூம் பார்மிங், சாப்ட்வேர் மற்றும் ஆர்ட் ஜுவல்லரி இப்படி வெற்றிகரமா இயங்கும் பெண்களை பேட்டி எடுத்துட்டேன். 'டாப் ஒன் பொசிஷனு'க்கு தான் தேடிக்கிட்டு இருக்கேன்.''
''அருமை. நல்ல சாதனையாளரா தேடு. எவரெஸ்ட் ஏறினவங்க, கான்சர் சர்வைவர், மாரத்தான் முடிச்சவங்க... இப்படி.''
''அதான் பண்ணிகிட்டிருக்கேன், திவா. சரியான நபர் கிடைக்கலே,'' என்றாள், அனன்யா.
''பொறுமையா பாரு. பிரமாதமா கிடைக்கும்,'' என, அவள் நெற்றியை மென்மையாக வருடி, அவன் நகர்ந்தபோது மொபைல்போன் அழைத்தது.
''ஹாய், நவி, என்ன சொல்லு,'' என்றாள்.
''அனன்யா. இன்னிக்கு எங்க தாத்தாவுக்கு, 90வது பர்த்டே. 1:00 மணிக்கு, 'கேக் கட்டிங் வித் ப்ரஞ்ச்' கண்டிப்பா வரணும். ப்ளீஸ்,'' என்றாள், நவி.
''ஏய், உனக்கு தாத்தா இருக்கிற விஷயமே இப்பதாண்டி தெரியுது எனக்கு,'' என்றாள்.
''அவரு ரொம்ப கண்டிப்பான ஆளு, அனன்யா. மிலிட்டரி ஆள் மாதிரியே இருப்பார். நாங்களே அவர்கிட்ட கொஞ்சம் தள்ளி நின்னு தான் பழகுவோம். சரி, கண்டிப்பா வந்துடணும். மிஸ் பண்ணக் கூடாது.''
''இன்னிக்குள்ள முடிக்க வேண்டிய முக்கியமான வேலை இருக்கு, நவி. இருந்தாலும், 90 வயசு பர்த்டே பார்ட்டியை விட முடியுமா? ஆசிர்வாதம் வாங்கணுமே. கட்டாயம் வரேன்.''
யோசனையுடன் கிளம்பினாள், அனன்யா.
வீட்டின் மாடியில் வட்ட வடிவில் அழகான பந்தல் போட்டு, பூத்தோரணங்கள் ஆடி அசைந்த காட்சி ரம்மியமாக இருந்தது. ஷாமியானாவின் இளம் ஆரஞ்சு நிறம். ரோஜாக்களில் செய்த மலர் அலங்காரம். இரைச்சலுடன் ஓடும் குழந்தைகளின் உற்சாகம். சென்னா மசாலாவும், பனீரும் கலந்த நறுமணம்.
''வா வா, அனன்யா. அம்மா என் தோழி வந்திருக்கா. ஜர்னலிஸ்ட், நல்ல புத்திசாலி. அனி... இதுதான் என் குடும்பம். அப்பா - அம்மா, அண்ணன் - அண்ணி. அதோ, தாத்தா - பாட்டி. உக்காரு, அனி. ஜூஸ் கொண்டு வரேன்,'' என, வாய் நிறைய வரவேற்றாள், நவி.
''நீ உக்காரு மொதல்ல. லெமன் டீ குடிச்சுட்டு தான் வந்தேன். தாத்தா செம கம்பீரமா இருக்காரு. பாட்டி, 'க்யூட்'டா சிரிச்ச முகமா, பார்பி பொம்மை மாதிரி இருக்காங்க, வாவ்.''
''ஆமாம், அனி. தே ஆர் மேட் பார் ஈச் அதர்,'' என, பெருமையுடன் சொன்னாள், நவி.
பூரிப்புடன் அவர்களைப் பார்த்தாள், அனன்யா. எத்தனை தம்பதிகளுக்கு கிடைக்கும் இப்படி அன்னியோன்னிய வாழ்வு? வேரெல்லாம் பூத்திருப்பது போல அவ்வளவு அழகாக இருக்கிறது அவர்களைப் பார்க்கும்போது!
பிறந்தநாள் விழா துவங்கியது.
விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தாத்தாவும், பாட்டியும் சிறு மேடையில் ஏறினர். பெரிய, 'ப்ளம் கேக்' பளபளப்பாக காத்திருந்தது. 90 என்று எழுதப்பட்ட மெழுவர்த்திகள், ஒளி வீச காத்திருந்தன.
குழந்தை ஒன்று மேடை ஏறி, தாத்தாவுக்கு ரோஜா மாலையை அணிவித்து, 'ஹாப்பி பர்த்டே டியர் தாத்தா...' என, சிரிக்க, கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.
குனிந்து குழந்தைக்கு முத்தமிட்டு, அனைவருக்கும் வணக்கம் சொன்னார், தாத்தா.
உடனே தன் மாலையை கழற்றி, பாட்டிக்கு அணிவித்தார்.
பாட்டி ஒரு கணம் திகைத்தாலும், உடனே லேசாக வெட்கப்பட்டு சிரித்து, மாலையை ஏற்றுக் கொண்டாள்.
வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டார், தாத்தா.
''மை டியர் ப்ரண்ட்ஸ்,'' என, தாத்தா ஆரம்பித்ததும் அமைதி ஆனது கூட்டம்.
''என்னுடைய, 90வது பிறந்த நாளுக்கு வந்திருக்கும், உங்க எல்லாருக்கும் என் நன்றி. ஆனால், இப்படி ஒரு பிறந்தநாள் வரும் நாள் வரைக்கும், நான் உயிரோடு இருப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் என் மனைவி, விஜயா தான் காரணம்.
''அவள் இல்லை என்றால், நான் இல்லை. இந்த நாளை என் நன்றிக்கடன் செய்யும் நாளாக எடுத்துக் கொண்டு, உங்களிடம் சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா?'' என்றார், தாத்தா.
'பேசுங்கள், பேசுங்கள்...' என, எல்லாருமே கூறினர்.
''தாங்க் யூ. 60 ஆண்டுகளுக்கு முன், எங்களுக்கு திருமணம் ஆனது. அந்த தினங்களில் ஆண் எப்படி இருந்தான், பெண் எப்படி இருந்தாள் என, உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மமதையின் உச்சமாக நான் இருந்தேன். சொந்தமாக, மோட்டார் உதிரி பாகங்கள் வியாபாரம்.
''நானே ராஜா என் தொழிலுக்கு. வீட்டுக்கு வந்தாலும், அதே மனநிலையில் தான் இருப்பேன். 20 வயது சிறுமி அவள். என்னைப் பார்த்து அவள் பயப்பட வேண்டும், ஓடி ஓடி வந்து சேவை செய்ய வேண்டும், கூப்பிட்ட குரலுக்கு அடிமையாய் வந்து சேவகம் செய்ய வேண்டும் என, ஆதிக்க உணர்வுகள் என்னை ஆட்டி வைத்தன.
''அடுத்த, 10 ஆண்டுகளில் என் திமிர் கூடிக் கொண்டே போனது. புகைப்பழக்கம் வந்தது. மதுப்பழக்கமும் சேர்ந்து கொண்டது. பிசினஸ் நெருக்கடி வரும்போது, மூக்கு முட்ட குடித்து விட்டு வந்து, அவளை அடிப்பது வழக்கமானது.
''முதலில் அதிர்ந்தவள், பிறகு விழித்துக் கொண்டாள். ஒரு நாள், அடிக்க வந்த என் கையை இறுக்கிப் பிடித்தாள். நாற்காலியில் திணித்தாள். பொறுமையாகப் பேசினாள். 'இதே போல் எனக்கும், 'டென்ஷன்' இருக்கு. பிள்ளைகள் படிப்பு, குடும்பம், பொருளாதாரம் இப்படி பிரச்னைகள் இருக்கு. நானும் புகைக்கட்டுமா, நானும் குடிக்கட்டுமா?' எனக் கேட்டாள்.
''ஆண் திமிரில் ஒரு தடவை நெறிகெட்டு நடந்தேன். அவளை வேதனைப்படுத்த, நானே பெருமையாக அவளிடம் சொன்னேன்.
''கொஞ்சமும் பதட்டப்படாமல் கேட்டுக் கொண்டாள். 'இந்த ஒரு தடவை மன்னிக்கிறேன். ஏன் தெரியுமா? இது, மனப்பிறழ்வில் நீங்கள் செய்த குற்றம். போதையின் பிடியில் கிடந்த அவலம். இன்னொரு தடவை இது நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் நான், குழந்தைகளுடன் கிளம்பி விடுவேன். என் தையல் மெஷின் இருக்கிறது. கல்யாண ரவிக்கைகள் மாதம் பத்து தைத்தாலே போதும். குடும்பம் பிழைத்து விடும். மானம் கெட்டு இந்த வீட்டில் இருப்பேன் என்று நினைக்க வேண்டாம்...' என, பொறுமையாக சொல்லிவிட்டுப் போய், செடிகளுக்கு நீர் விட ஆரம்பித்தாள்.
''நான் அந்த நிமிடமே தீக்குளித்தது போல உணர்ந்தேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பொருளாதாரம் சரிந்தது. வீடு தடுமாறியது. குழந்தைகள் படிப்பு, உணவு, வாடகை என, எல்லாமே நின்று போகும் சூழல். அவள் விசுவரூபம் எடுத்தாள்.
''வங்கியில் சுயதொழில் கடன் வாங்கி, நாலு தையல் மிஷின், இரண்டு உதவியாளர்கள் என, கடை திறந்தாள். இடைவிடாத உழைப்பு. சரிந்த பொருளாதாரம் மேலே வந்தது. என் தொழிலும் மெல்ல ஏறுமுகம் கண்டது.
''நினைத்துப் பார்க்கிறேன். அவள் இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்பேன்? மனம் போன போக்கில் நடந்து, எல்லாரிடமும் வெறுப்பை சம்பாதித்து, உடல்நலம் குறைந்து, என் மேல் மரியாதை மறைந்து சோம்பேறியாக கிடந்திருக்கலாம்.
''இல்லையென்றால், சர்வாதிகாரி மனோபாவத்திலேயே இன்று வரை இருந்து, மன நிம்மதி என்றால், என்ன என்று உணராமலே போயிருக்கலாம். வேண்டா வெறுப்பாக ஒரே வீட்டில், இரண்டு எதிரிகளாக போராட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.
''இன்று நாங்கள் மனம் இணைந்த தம்பதியாக இருக்கிறோம். எங்கள் மனங்களில் தினம் ரோஜாக்கள் மலர்கின்றன. அவள் காட்டிய பொறுமை, இன்று எங்கள் இல்லத்தை வெளிச்சமாக்கி இருக்கிறது.
''அவளுடைய மனமுதிர்ச்சி என்னை மனிதன் ஆக்கியிருக்கிறது. அவள் காட்டிய அணுகுமுறை, வீட்டை நந்தவனமாக்கி இருக்கிறது. எதை எப்படி கையாள்வது என்ற அவளின் புத்திசாலித்தனம், எங்களை வெற்றிகரமான தம்பதி ஆக்கியிருக்கிறது.
''பெண்களே நீங்கள் எல்லாரும் இப்படி இருங்கள் என, நான் சொல்லவில்லை. என் அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளை சொல்கிறேன். ஆணும், பெண்ணும் சமம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். பெண் என்பவள், ஆணை விட மேலே இருப்பவள். ஜெனடிகலாக பொறுமை, மனமுதிர்ச்சி, பேரறிவு, மெய்யன்பு என, வரம் வாங்கி வந்திருப்பவள்.
''அவளால் ஒவ்வொரு உலகையும் புதிதாகப் படைக்க முடியும். இந்த உண்மை தெரிகிற அன்றைக்கு அவள் அலமலர்ந்து சிரிப்பாள். பிரச்னைகளை, சுலபமாக கையாளுவாள். அற்ப மானுடனாக தன்னுடன் வாழும் ஆண்மகனை ஒரு கலைப்படைப்பாக மாற்றுவாள், என் விஜயா செய்தது போல,'' என, கண்கலங்கினார், தாத்தா.
சட்டென திரும்பி, மனைவியின் கைகளைப் பற்றி கண்களில் வைத்துக் கொண்டார்.
கூட்டம் நெகிழ்ந்து கைதட்டியது.
மொபைல் போனில், திவாகரை அழைத்து, ''எனக்கு, 'டாப் ஒன்' பெண் கிடைத்து விட்டார், திவா...'' என, தன் கணவரிடம் கூறினாள், அனன்யா.
வி. சம்யுக்தா