
காலை நேரம் சிறிது சிறிதாக தேநீரை உறிஞ்சிக் குடிப்பது, சுகம் தான். கொஞ்சம் சூடு குறைந்தாலும் ஈஸ்வரனுக்கு குடிக்க பிடிக்காது. தானே போய், சூடு செய்து வந்து குடிப்பார்.
'உங்கப்பாவுக்கு ஆனாலும் நாக்கு நீளம். இந்த வயதிலும் வக்கணையா ருசி கேக்குது...' என, புருஷனிடம் சிடுசிடுப்பாள், ரேவதி.
'அப்பா பாவம்... உன்னை தொந்தரவு பண்ணலை தானே...' என்பான், சேகர்.
'நீங்க தான் மெச்சுக்கணும். விட்டுக் கொடுப்பீங்களா?'
அப்பா, தன் மனைவியிடம் இடிபடுவது சேகருக்கு சங்கடமாகத்தான் இருக்கும்.
ஈஸ்வரனுக்கு ரெண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளை, மேல் நாட்டு வாசம். எப்பவாவது இந்தியாவுக்கு குடும்பத்தோடு வந்து போவான்.
இரண்டாவது பிள்ளை, சேகர். மனைவி ரேவதி மற்றும் குழந்தைகளுடன் உள்நாட்டில் வசிக்கிறான். அவன் கூடத் தான் இருந்தார், ஈஸ்வரன்.
'மூத்த மருமகள் எந்தவித பொறுப்பும் இல்லாமல், சவுகரியமாக வெளிநாட்டில் இருக்க. தான் மட்டும் இந்தக் கிழத்தோட மட்டை அடிக்கணுமா...' என்பாள், ரேவதி.
'புண்ணியம் எல்லாம் உனக்கு தான் கிடைக்கும்...' என்பான், சேகர்.
வீட்டில் இப்படி பட்டிமன்றம் நடப்பது, ஈஸ்வரனுக்கும் தெரியும். சிரித்துக் கொள்வார்.
சூமந்திரக்காளி என, அப்படியே காணாமல் போய்விட முடியுமா? உயிர் இருக்கும் வரை இங்கே இருந்து தானே ஆகணும்!
மீந்து போன பழசை எல்லாம் சாப்பிட தயங்குவார்.
'வேண்டாம்மா... பருப்பு பொடி போட்டு சாப்பிட்டுக்கிறேன்...' என, பிடிவாதமாக சொல்லி விடுவார். ரேவதிக்கு, கடுப்பாக இருக்கும்.
இன்று, அவருக்கு விடுமுறை. ரேவதி, அவள் அம்மா வீட்டுக்கு போனால், இவருக்கு விடுமுறை நாள் மாதிரி தான். தானே சமையலறைக்குள் புகுந்து, அட்டகாசம் செய்து விடுவார்.
கோதுமை மாவை வைத்து, அல்வா கிண்டி விடுவார். அவருக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். முதல் நாளே, தன், ஏ.டி.எம்., கார்டை தேய்த்து முந்திரிப்பருப்பு, நெய் வாங்கி வந்து, அறையில் ஒளித்து வைத்துக் கொள்வார். மருமகள் அம்மா வீட்டுக்குப் போனால், நான்கு நாள் வரமாட்டாள். அவள் வரும் வரை, அவர் ராஜ்ஜியம் தான். என்ன சுகமான சுதந்திரம்; விடுமுறை விட்டதும், குதிக்கும் பள்ளிப் பிள்ளை போல!
'பரமு... இன்று ஹாலிடே. வா ஒண்ணா சாப்பிடலாம். தக்காளி பிரியாணி பண்ணப் போறேன்...' அடுத்த தெரு நண்பனான, பரமசிவத்துக்கு இந்த, 'மெசெஜ்' பறந்தது. உடனே கிளம்பி விடுவார், பரமு. அவருக்கும் அது விடுமுறை நாள். மகளிடமிருந்து ஒரு தப்பித்தல்.
தன் மகளுடன் இருந்தார், பரமசிவம். ஈஸ்வரனின் வயது தான் அவருக்கும். ரெண்டு மகள்கள் தான். ஒருத்தி, வெளிநாட்டில். உள்ளூரில் இருக்கும் மகளுடன் தான் இருந்தார். அன்றைய நாளிதழுடன், ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்து விட்டார்.
''ஈஸ்வரா... என்ன பண்ணிட்டு இருக்கே?''
கரண்டியும், கையுமாக வந்தவர், ''வா வா உக்கார். இதோ சமையல் ஆயிடுச்சு,'' என்றார், ஈஸ்வரன்.
ஊர் கதை பேசியபடி இருவரும், சமையலறையில் அட்டகாசம் செய்தனர். இருவரும் உட்கார்ந்து அரட்டை அடித்தபடி, தக்காளி பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர்.
''சொல்லு பரமு, காலை டிபன் என்ன சாப்பிட்டே?''
''அடை கேட்டேன். அதெல்லாம் உனக்கு ஒத்துக்காதுப்பா, போட்டதை சாப்பிடுன்னு சொல்லிட்டா, மகள். ரவை தோசைன்னு சுட்டுப் போட்டாள். வெங்காயம் இல்லே. வாசனைக்கு சீரகமோ, கறிவேப்பில்லையோ இல்லே. விழுங்கிட்டு வரேன்,'' என்றார், சோகமாக.
வாய்விட்டு சிரித்தவர், ''இதுக்கு போய், 'டென்ஷன்' ஆனா எப்படி, பரமு? இன்னொரு நாள் செய்து கொடுப்பா. மகள் தானே? 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கிட்டு போ,'' என்றார், ஈஸ்வரன்.
பரமசிவத்தின் மனைவி இறந்து, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.
''பெண்டாட்டி அருமை இப்ப தான் புரியுதுடா, ஈஸ்வரா. இந்த ஊன்றுகோல் வயசில், இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டா. தினம் வாழறதே ஒரு போராட்டமா இருக்கு. நீ எப்படி மருமகளோட இப்படி ஜாலியா இருக்கே? உனக்கு நல்ல மருமகள் போலிருக்கு,'' என்றார்.
''மூப்பு என்ற காலம், மெல்ல வந்து சேரும் போது, மனம் அதை லேசில், ஏற்றுக் கொள்ளமாட்டேன்னு அடம் பிடிக்கும். ஆளுமையை முதல்ல விட்டுக் கொடுத்திடணும். 'ஈகோ' விட்டில் பூச்சியாக செத்துடணும்.
''மகளோ, மருமகளோ, அவர்கள் பேச்சை பெரிதாக எடுத்து, பழைய வீம்பை காட்டக் கூடாது. காட்டினால், 'வயசாச்சுல்ல பேசாம அக்கடான்னு இருங்க'ன்னு சொல்லிடுவாங்க. குறிப்பறிந்து நடந்துக்கணும், பாஸ். இது தான் மூத்தோர் மொழி. தேய்பிறை காலங்களிலும் ஒளி தர கத்துக்கணும்.''
''இதை நீ இப்படி சுலபமா எடுத்துக்கிறே. என்னாலே முடியலை.''
''பரமு, நமக்கு, 'ரிட்டையர்மென்ட்' வேலையிலிருந்து மட்டுமில்ல. குடும்பத் தலைவன் என்ற பதவியிலிருந்தும், 'ரிட்டையர்மென்ட்' தான். 'ஏய்' என்றவுடன், 'என்னப்பா'ன்னு வருவாங்க அல்லது 'என்னங்க'ன்னு மனைவி வருவா.
''இப்ப, 'ஏய்'ன்னு சொல்ல முடியாது. அம்மாடி, கண்ணு அப்படின்னு, கூப்பிட பழகிக்கணும். மாத்தி யோசி, பரமு. நம்ம வயசுக்கு அது தான் பொருத்தம். அப்ப தான் நமக்கு, சிறிது மரியாதை கிடைக்கும். எல்லாம் நம்ம கையிலே தான் இருக்கு.''
''என்னமோ சொல்றே. ஒண்ணும் புரியலை,'' என்றார், பரமசிவம்.
சிறிது நேரம் சீட்டு விளையாடினர். மாலையில், அருகில் இருந்த பூங்காவில் உலாத்தினர். அங்கு விற்ற இளநீர் வாங்கி அருந்தினர்.
''இளநீர் ரொம்ப நல்லாயிருக்கு இல்ல. வழுக்கை அதை விட பிரமாதம்,'' என்றார், ஈஸ்வரன்.
கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் பேசினர்.
கடி ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைத்தார், ஈஸ்வரன்.
அங்கு டைலர் ஆறுமுகம் வர, அவருக்கு, 5,000 ரூபாய் கொடுத்தார், ஈஸ்வரன்.
''பாவம், நம்ம வயசு தான். அவனுக்கு ஏது ஓய்வூதியம். அதான், மாசா மாசம் அவன் செலவுக்கு கொடுக்கறது தான். இதிலே ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. நாமும் இந்த வயசில் யாருக்கோ உபயோகமா இருக்கோமேன்னு ஒரு சந்தோஷம்,'' நெகிழ்வுடன் சொன்னார்.
தானும் அது போல் இல்லாதபட்ட, தன் வயது தோழருக்கு கொடுக்க, பரமுவும் முடிவு செய்தார்.
''எவ்வளவு சந்தோஷங்கள் இருக்கு தெரியுமா, பரமு? இந்த பெரிய கோடு போட்டதாலே, மருமகளின், 'டிரீட்மென்ட்' சின்ன கோடா போயிடும் இல்ல?''
''உன் கூட பேசினா, உற்சாகமா இருக்கு. வீட்டுக்கு போனதும், 'டல்' ஆயிடறேன். என்னமோ ஈஸ்வரா, வாழ்க்கை கை நழுவி போயிட்டா மாதிரி இருக்கு. துாக்கி வளர்த்த பொண்ணு, 'சும்மா இரேன்பா'ன்னா வலிக்குது.
''அதுமட்டுமல்ல, 'உன்னோட தொல்லையாப் போச்சு. கண்ணு தெரியலைன்னா ஓரமா நில்லு. காது கேக்கலைன்னு புலம்பாதே. வயசானா அப்படித்தான். இப்ப காது நல்லா கேட்டு மீட்டிங் போய் கேக்கப் போறியா?' இது போன்ற பேச்சுக்களைக் கேட்டு கேட்டு வெம்பி போவுதுடா, ஈஸ்வரா. பேசாம நாமே முதியோர் இல்லம் போய் சேர்ந்திடலாமான்னு தோணுது,'' என்றார், பரமு.
''முதியோர் இல்லத்தில் பிரச்னை இல்லையா என்ன? அவர்கள் சொன்ன நேரத்துக்கு எழுந்துக்கணும். சொன்ன நேரத்தில் சாப்பிடணும். கருணை கிடைக்கும், அன்பு கிடைக்காது. அக்கரைக்கு இக்கரைப் பச்சை. 'எக்ஸ்பயரி டேட்' தாண்டி, நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம். துாக்கிப் போடாம வச்சிருக்காங்களேன்னு திருப்தி படு.
''முதியோர் இல்லம், சகல வசதி இருக்குன்னே வச்சுக்கோ. மகன், மகள், பேரப் பிள்ளைகள் இவங்களை எல்லாம் பார்க்கக் கூட முடியாது. ஒரு நாளும் கிழமையுமா, மருமகள், மகன், பேரப் பிள்ளைகள் மத்தியில் சிரிப்புடன் கொண்டாடலாம்.
''சூரியன் போச்சேன்னு அழுவாதே. நட்சத்திரம் வருதேன்னு ஆனந்தப்படு. அடுத்த வாரம் தீபாவளி வருது. குடும்பமே ஒண்ணா கூடும். அந்த திருப்தி இருக்கே. அதுக்கு இணை ஏது?
''நீ சிம்மாசனத்திலிருந்து இறங்கு. வாழ்க்கை பிடிபடும். உடல் நிலை ரொம்ப மோசமா ஆகும் போது பார்த்துக்கலாம், முதியோர் இல்ல வாழ்க்கை பத்தி. அதுவரை குடும்பத்தோடு இருக்கப் பார்.''
பூ சிதறல் போல், தன் மேல் அபிஷேகம் பண்ணப்பட்ட, ஈஸ்வரனின் வார்த்தைகளை அசைபோட்டபடி வீட்டுப் படி ஏறினார், பரமசிவம்.
''அப்பா எங்கே போயிட்டீங்க? வீட்டுக்கு வந்தேன், உங்களைக் காணோம். பகீருன்னுச்சு. எங்காவது கண்ணு தெரியாம விழுந்து கிடக்கறீங்களோன்னு பார்க்கத் தான் கிளம்பிட்டு இருக்கேன்,'' செருப்புக்குள் கால் நுழைத்து நின்ற மகள் சொன்னாள்.
''எங்கம்மா போயிடப் போறேன்? ஈஸ்வரன் வீட்டுக்குத் தான்.''
''நல்லவேளை வந்திட்டீங்க. தீபாவளி டிரஸ் பாருங்க. உங்களுக்கு பிடிச்ச பச்சைக் கலர் ஷர்ட்,'' அவள் குரலில் வாஞ்சை.
''எனக்கெதுக்கும்மா புதுசெல்லாம்? வீண் செலவு.''
''நல்லாயிருக்கே. உங்களுக்கு போக தான் எங்களுக்கு.''
மகள் இது மாதிரி பாசம் காட்டியது இல்லையா? அவருக்கு திட்டுவது மட்டுமே மூளையில் பதிவு ஆகி இருந்திருக்கிறது. மாத்தியோசின்னு, ஈஸ்வரன் சொன்னது இதைத் தானோ!
''தாத்தா, பாருங்க. அம்மா எனக்காக வாங்கிட்டு வந்திருக்காங்க, 'டிராயிங்' புத்தகம். என் விருப்பப்படி என்ன வேணா வரையலாம். நீங்க எனக்கு முதல்ல வரைஞ்சு தாங்க தாத்தா,'' என்றான், பேரன்.
நம் கையில் வாழ்க்கை என்பது போல, ஒரு ஜன்னல் திறப்பது போல் வரைந்தார். திறந்ததும், பார்வைக்கு கடலலைகள் பாய் விரிக்கும் கோலமும், வானம் உதயசூரியனை எதிர்பார்த்திருக்கும் சிவந்த கோலம் தெரியும்படி வரைந்தார்.
''நல்லா இருக்கா?''
''ரொம்ப நல்லாயிருக்கு, தாத்தா.''
ஆம். வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு. இளமையின் திமிரையும், நான் என்பதையும் விட்டு விட்டால், கடலலை பரப்பும் நுரை போல் குதுாகலம் விரிந்து வளரும்.
அங்கே ஈஸ்வரன் வீட்டில்...
''குலதெய்வம் கோவிலுக்கு அம்மா கூட்டிப் போனாங்க,'' என்றவள், குங்குமம் கொடுத்து, ''ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா,'' என்றாள், ரேவதி; அவருக்கு உச்சி குளிர்ந்தது.
''நல்லாயிரும்மா,'' என, மனதார வாழ்த்தினார்.
'இதெல்லாம் முதியோர் இல்லத்தில் கிடைக்குமா? என்னமோ அங்க போயிடலாம் போல இருக்குன்னு சொன்னியேடா, பரமு. வாழ நினைத்தால் எந்த வயதிலும் நன்கு வழலாம், பரமு...' என, நினைத்துக் கொண்டார், ஈஸ்வரன்.
சங்கரி அப்பன்