sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவேன்! (18)

/

விண்ணையும் தொடுவேன்! (18)

விண்ணையும் தொடுவேன்! (18)

விண்ணையும் தொடுவேன்! (18)


PUBLISHED ON : ஜூலை 06, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: நீர்வளூர் கிராமத்தில் ஏற்பட்ட ஜாதி கலவரத்தைப் பற்றி, தலைமை செயலருக்கும், முதல்வருக்கும் தெரியப்படுத்த, நேரில் செல்ல விரும்பினான், புகழேந்தி.

புகழேந்தியின் பத்திரிகை நண்பனான பிரபாகரும், அவனுடன் சென்னை திரும்பினான். சென்னை கிளம்பும் முன், புகழேந்தியும், பிரபாகரும், கயல்விழியை, 'டிஸ்சார்ஜ்' செய்யலாம் என, தலைமை மருத்துவர் கூற, மருத்துவமனையில் இருந்து வந்ததும், தன் வீட்டில் தங்கலாம் எனக் கூறினான், புகழேந்தி.


சென்னை திரும்பும் போது, நீர்வளூர் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு முழுக்க முழுக்க, புகழேந்தியின் மாமனார் தான் காரணம் என்பதற்கான வீடியோ ஆதாரத்தை, புகழேந்தியிடம் காட்டினான், பிரபாகர்.

அதைப்பார்த்து மிரண்டு போன, புகழேந்தி, இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பரா என, அதிர்ந்தான்.

தலைமை செயலரை பார்த்து, நீர்வளூர் கிராமத்தின் நிலையை எடுத்துக் கூறினாலும், அக்கலவரத்துக்கு தன் மாமனார் தான் காரணம் என்பதை சொல்வதை தவிர்த்தான், புகழேந்தி.

நீர்வளூர் கிராமத்தில் நடந்த கலவரம் பற்றி, தன் ஆதங்கத்தை, தலைமை செயலர் கூறியதும், இதற்கெல்லாம் காரணம் அமைச்சரான, தன் மாமனார் தான் என, சொல்ல முயன்றான். ஆனால், சட்டென்று அவனது நுண்ணறிவு தடுத்து விட்டது.

'இது என்ன சிறுபிள்ளைத்தனம். பள்ளிச் சிறுவனா, நான்! மாமனார், மருமகன் மீது கொண்டிருக்கும் சொந்தக் காழ்ப்புணர்ச்சி. இதையெல்லாமா இவரிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியும்...' என, தன் எண்ணத்திற்காக தானே வெட்கப்பட்டான்.

'இந்த அளவிற்கா தரம் தாழ்ந்து போனேன், நான்...' என, தன்னை நினைத்து அவமானப்பட்டான்.

உள்ளுக்குள் நொந்து கொண்ட போது, தலைமைச் செயலரின் குரல், அவனை கலைத்தது.

''இதற்கு மேலும் இப்பிரச்னை தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். டில்லி விஷயத்தை நாங்களே கையாள்கிறோம். உங்கள் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிறைய நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, கவலைப்பட வேண்டாம். கவனமாகவும், விழிப்புணர்வாகவும் இருங்கள்!''

பட்டு கத்தரிக்கிற லாவகத்தில், அவர் அதோடு முடித்துக் கொண்டது புரிந்ததும், எழுந்து நின்று கை கூப்பினான்.

''சார், முதல்வர்...''

''இன்னொரு நாள் சந்திப்பார்,'' என்றவர், அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை உணர்ந்தவராக, ''இன்னொரு அவசர வேலையின் காரணமாக, சீக்கிரமே கிளம்பிப் போய் விட்டார். நிச்சயம் சந்திப்பார். நம்பிக்கையோடு போய் வாருங்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்,'' என்றார், தலைமை செயலர்.

அந்த கடைசி வார்த்தைகளில் மனம் நிறைந்தது. வரும் போது இருந்த பாரம், வெகுவாகக் குறைந்திருந்தது. முதல்வரை சந்திக்க முடியாத குறை தவிர, மற்ற எல்லாமே நிறைவாகவே நடந்திருக்கிறது.

வெளியில் வந்த போது, 'ஊர் போய் சேர குறைந்தபட்சம், மூன்று மணி நேரமாவது ஆகும். எங்காவது சாப்பிட்டு விட்டு போய் விடலாமா? பிரபா சாப்பிட்டு இருப்பானா? மொபைல் போனில் அழைத்தான்.

''சாப்பிட்டாயா, பிரபா?''

''இன்னும் இல்லை, புகழ். போன வேலை நல்லபடியாக முடிந்ததா?''

''எல்லாம் நல்லபடியாக முடிந்தது, பிரபா. வருகிறாயா சாப்பிடப் போகலாம்.''

''இல்லை, புகழ். உன்னுடைய கட்டுரை தான், 'ப்ரூப்' பார்த்துக் கொண்டிருக்கேன். கடைசி பாரம் ஓடிக்கிட்டிருக்கு. 'இஷ்யூ' முடிக்கணும்.''

''நீயா, 'ப்ரூப்' பார்க்கற? 'ப்ரூப் ரீடர்' இல்லை?''

''இருக்காரு. ஆனால், உன்னுடையதை மட்டும் நான், மீண்டும் பார்த்து விடுவேன்.''

''அப்போ நான் கிளம்பட்டுமா?''

''பார்த்துப் போ, புகழ். நாளைக்கு பேசறேன்.''

காரை எடுத்த போது தன் மாமனாரின் ஞாபகம் வந்தது.

'மாமனாரா அவர்? பாகுபலி கட்டப்பா! அவரை நேரில் போய் பார்த்து, வலிக்க வலிக்க நாலு வார்த்தை கேட்டால் என்ன? வலிக்குமா அவருக்கு? நிச்சயமாக பார்க்க வேண்டும்! அவர் செய்தது எப்படிப்பட்ட குற்றம் என்பதை, எடுத்து சொல்ல வேண்டும்.

'என் மீதுள்ள கோபத்தையும், பகைமையையும் அப்பாவி மக்கள் மீது காட்டாதீர்கள். அவர்களை பழி வாங்காதீர்கள். அவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்காதீர்கள்.

'இன்னொரு முறை இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டால், முதல்வரிடம் சொல்லத் தயங்க மாட்டேன். நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்...' என எச்சரிக்கை செய்து விட்டே கிளம்ப வேண்டும்.

பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம் நோக்கி வண்டியை செலுத்தினான், புகழேந்தி.

புகழேந்தி சென்ற போது, அமைச்சர் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு நிமிடம் தாமதமாகி இருந்தால் கூட, அவரைப் பிடித்திருக்க முடியாது என, நினைத்து கொண்டான். புருவங்கள் சுருங்க, அவனை ஏறிட்டார், அமைச்சர்.

''எங்க வந்த?'' என, ஒருமையில் கேட்டார்.

''உங்களைப் பார்க்கத்தான்!''

''என்னைப் பார்க்கணும்ன்னா, 'அப்பாய்ன்ட்மென்ட்' வாங்குறதில்லையா? திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி நுழைஞ்சுடுறதா? ஆமா, எப்படி இருக்கா, உன் குருவிக்கார வப்பாட்டி?''

''போதும் நிறுத்துங்க. ரொம்ப மரியாதைக் குறைவா பேசுறீங்க. அதைவிடக் கேவலமான, வில்லத்தனமெல்லாம் செய்யுறீங்க. நீர்வளூர் கிராமம், பத்தி எரிஞ்சதுக்கு நீங்க தான் காரணம்ன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களா?''

ஒரு வினாடி ஆடிப் போனார், அவர். ஒரே வினாடி தான். உடனே, சுதாரித்துக் கொண்டு உதார் விட்டார்.

''தெரிஞ்சுக்கிட்டல்ல. என்ன செய்ய முடியும் உன்னால?''

''என்ன செய்ய முடியாது? முதல்வரிடம் ஆதாரத்தோட நிரூபிப்பேன்.''

''டேய், என்னடா நினைச்சுக்கிட்டிருக்க... என்னைப் பார்த்தா உனக்கு கேனையனாத் தெரியுதா? நான், அமைதிப்படை சத்யராஜ்டா... என்னை மனசுல வச்சுக்கிட்டுத்தான் மணிவண்ணன் அந்த அமாவாசை கேரக்டரையே படைச்சாரு.

''மகள், தாலியறுத்தாலும் பரவாயில்லைன்னு, போட்டு தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருப்பேன். இதைப் பத்தி வெளிய மூச்சுவிட்ட, உன்னை நாற அடிச்சுடுவேன், ஜாக்கிரதை. சி.எம்., கிட்ட சொல்றானாம்! எத்தனை திமிருடா உனக்கு?''

சட்டென்று அவனுக்கு அவர் பற்ற வைத்த வீடுகளும், பலியான உயிர்களும் நினைவுக்கு வந்தன.

'ச்சீ... என்ன மனிதர் இவர். மூர்க்கனிடமும், முட்டாள்களிடமும் நியாயங்கள் எடுபடாது. இவர் முட்டாளில்லை. மூர்க்கன்! படுபயங்கர மூர்க்கன்...' என, நினைத்தபடி, திரும்பி காரை நோக்கி நடந்த போது, பின்னால் அவர் குரல் உறுமலாகக் கேட்டது.

''பார்த்து நடந்துக்க. இல்லாட்டி காணாமப் போயிடுவ.''

''நானும் அரசு உயர் அதிகாரி தான். நீங்களும் பார்த்து நடந்துக்குங்க. இல்லாட்டி என்ன செய்யணும்ன்னு எனக்கும் தெரியும்.''

''டேய், டேய், டேய்...'' என, அவனை அறைய வந்தபோது, வெறுப்புடன் நகர்ந்து காரில் ஏறி, சடாரென்று காரைக் கிளப்பினான்.

அமைச்சரது வீட்டை விட்டு கார் சீறி புறப்பட்ட போது, அவனுக்குள் எல்லையற்ற வெறுப்பு மண்டிக் கொண்டது. வெறும் சேறு கூட அல்ல. புதை சேற்றில் விழுந்து விட்டது புரிந்தது.

சட்டென்று அவனது கோபமெல்லாம், சுபாங்கி மீது திரும்பியது. எப்படியெல்லாம் பேசி நடித்து ஏமாற்றி விட்டாள். அவள் வராது போயிருந்தால், தன் வாழ்க்கை இவ்வாறெல்லாம் திசை திரும்பி இருக்காது. ஏமாற்றியது அவள் தவறென்றால், ஏமாந்தது தன் தவறு இல்லையா? ஆராய்ந்து பார்க்காதது யார் குற்றம்?

அறிவு, திறமை, கல்வி, எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் இருந்தும் கூட, வாழ்வதற்கு வேறு ஏதோ தேவைப்படுகிறது. அந்த திறமை தனியானதாக இருக்கிறது. அது வேறு விதமான சாமர்த்தியம் தான். அந்த சாமர்த்தியம் தெரியாதவன், கற்றுக் கொள்ளாதவன் தோல்வியுற்றவன் தான்.

பேசாமல் இந்த பதவியை உதறிவிட்டுப் போய் விட்டால் என்ன! இத்தனை குயுக்திகளும், சதுரங்க விளையாட்டுகளும் நிறைந்தவர்களுக்கு மத்தியில், சாதாரணமானவனாக இருப்பது கடினமானது.

கத்தியையும், அரிவாளையும், துப்பாக்கியையும் மறைத்து வைத்து செய்கிற யுத்தம். இந்த யுத்தம் அவனுக்கு பிடிக்காதது. போராட அவன் தயார். ஆனால், போரிடத் தயார் இல்லை. வாலியைக் கொன்ற மாதிரி, யாரையும் கொல்ல அவனால் முடியாது. அதெல்லாம் தன் மாமனார் போன்றவர்களால் மட்டுமே முடியும்.

ராஜினாமா கடிதம் கொடுப்பது ஒன்றும் பெரிதல்ல. ஆனால், அது, எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றதாகி விடும். அது சரியில்லை. எதற்காக இந்த நாற்காலியில் உட்கார நினைத்தேன்?

ஏழை, எளிய மக்களின் மறுக்கப்படுகிற நியாயமான தேவைகளை அவர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று தானே. அதை மறந்து விட்டு, தன் மாமனாராகிய அமைச்சர் ஒருவர் செய்த குற்றத்திற்காக, ஏன் பதவியை இழக்க வேண்டும்.

இது அறியாமை. கோழைத்தனம். புறமுதுகிட்டு ஓடுவதற்கு சமம். நின்று சமாளிக்கத் தெரியாத இயலாமை. அமைச்சரைப் போன்ற சிலர் இருக்கத்தான் செய்வர். அன்று, பிரபா சொன்ன மாதிரி. அவரைப் போன்ற தடாலடி ஆட்களும் கட்சிக்குத் தேவையானவர்கள் தான்; இயக்கத்திற்கு வேண்டியவர்கள் தான்.

இவர்களை தவிர்த்து, அரசியல் செய்ய இயலாது. முதல்வர், இவர்களைப் பக்குவமாக கையாளவில்லையா! அவ்வளவு பெரிய யானையை சின்ன முக்காலியில் ஏறி நிற்க வைத்து விடுகிற சர்க்கஸ் சூட்சுமம் தான் அரசியலும். இந்த சூட்சுமம், அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு அடுத்து, அதிகாரிகளுக்கும் தேவை தான்.

வீட்டை விட்டு வரும் போது அமைச்சர் சொன்னாரே.... நான், அமைதிப்படை அமாவாசை மாதிரி என்று! அவருக்கு, முதல்வன் பட புகழேந்தியை ஞாபகப்படுத்த வேண்டும். - இவ்வாறாக சிந்தனை ஓடியது.

வீடு வந்து சேர்ந்த போது, நள்ளிரவாகி விட்டது. அதுவரை துாங்காமல் அவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தவளைப் போல், விருட்டென்று கட்டிலை விட்டு இறங்கினாள், சுபாங்கி.

''இன்னைக்கு வீட்டுக்கு போய் அப்பாவை மிரட்டுனீங்களாமே!''

''நானா மிரட்டினேன்!''

''சி.எம்.,கிட்ட சொல்ல வேண்டி வரும்ன்னு பயமுறுத்தினீங்களாம்!''

''என்ன, சுபாங்கி இது? ஒரு மனுஷன் இவ்வளவு துாரம் போயிட்டு வந்திருக்கான். சாப்பிட்டானா, இல்லையா என்ற கவலை எதுவுமில்லை.''

''அதெல்லாம் நல்ல புருஷனுக்கு தான். உங்களை மாதிரி கள்ள உறவு வச்சிருக்கிற புருஷனுக்கெல்லாம் இல்ல.''

''என்னால இப்ப இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்க முடியாது. ரொம்ப அசதியா இருக்கு. நான் துாங்கப் போறேன்.

''எனக்கு பதில் சொல்லாம, நீங்க துாங்க முடியாது!''

''உன் அபத்தமான கேள்விக்கெல்லாம் என்கிட்ட பதில் கிடையாது.''

''அது சரி. மினிஸ்டர் பொண்ணு பேசினா அபத்தம். குருவிக்கார பொண்ணு பேசினா தேவாமிர்தமா!''

''சுபாங்கி!''

''அதட்றதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க. இங்கிருந்து நேரா நீங்க சென்னைக்குத்தான் போனீங்களா?''

''ஆமாம்!''

''பொய் வேற சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா. திருட்டுத்தனம் செய்தா, பொய் தானாக வரும் தானே!''

''இப்ப நான் என்ன திருட்டுத்தனம் செஞ்சேன்?''

''மருத்துவமனைக்கு போய், ஒரு மணி நேரம் அந்தப் பொண்ணோட இருந்து கொஞ்சிட்டு, அப்புறம் தானே சென்னைக்கு கிளம்புனீங்க!''

''ச்சீ!'' என, அவன் தன் படுக்கையிலிருந்து ஒரு தலையணையையும், போர்வையையும் எடுத்து, அறையை விட்டு அகல முற்பட்டான். பாய்ந்து வந்து, அவன் சட்டையின் முன் கழுத்துப் பகுதியை பற்றினாள், சுபாங்கி.

''சட்டையை விடு, சுபாங்கி.''

''முடியாது!''

பளாரென்று அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். அதை சிறிதும் எதிர்பார்க்காதவள், ஒரு வினாடி ஆடிப் போனாள். பின்னர், வெறிபிடித்தவள் மாதிரி ருத்ரதாண்டவம் ஆடினாள்.

''டேய்... என்னையாடா அடிச்ச?'' என, பதிலுக்கு அவன் கன்னத்தில் அறைந்தாள்.

அவனும் அதை எதிர்பார்க்காது போனாலும், சட்டென்று அவள் நிலைமை புரிய பரிதாபப்பட்டான். ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்க நேர்ந்த, தன் சிறுமையை உணர்ந்தான்.

''சாரி, சுபாங்கி. என்ன இருந்தாலும், உன்னை அடிச்சிருக்க கூடாது, நான். தயவு செய்து மன்னிச்சுடு. வா போய் படுக்கலாம்,'' என, அவள் தோள் மீது கை போட்டு அணைக்க முற்பட, சடாரென்று அவன் கையை தள்ளி விட்டாள்.

''டேய் என்னைத் தொடாதடா... என் மேல கை வைக்க எவ்வளவு தைரியம்டா உனக்கு... இப்பவே நான் அப்பாவைக் கூப்புடறேன். உடனே கிளம்பி வரச் சொல்றேன். அவர் வந்து பார்த்துக்குவாரு உன்னை...''

அவளிடமிருந்து மொபைல் போனை பிடுங்கினான், புகழேந்தி.



- தொடரும்- இந்துமதி






      Dinamalar
      Follow us