
அந்த, 17ம் நம்பர் பிளாட், பரபரப்பாக இருந்தது. அங்கு வசிப்பது, ராகவன் - மீனாட்சி என, இரண்டே பேர் தான். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ராகவனின் அசுரத்தனமான கோபம், அவர்களுடன் இன்னும் மூன்று பேர் வசிப்பதைப் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.
தனியார் நிறுவனம் ஒன்றில், எம்.டி., ஆக இருந்தான், ராகவன். அவனுக்கு கீழ், 60 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தன்னை பார்த்து அனைவரும் பயப்பட வேண்டும் என்று நினைக்கும் ரகத்தைச் சேர்ந்தவன். எம்.டி., என்பதால், அவன் திட்டினாலும் சகித்துக் கொள்வர். தன்னைக் கண்டு பயப்படுவதாக நினைத்துக் கொள்வான், ராகவன். இந்த எண்ணம் வீட்டிலும் தொடர்ந்தது.
எம்.ஏ., எகனாமிக்ஸ் படித்தவள், மீனாட்சி. பள்ளிப் பருவத்திலிருந்தே நீச்சலில் சாம்பியன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாள். திருமணத்திற்குப் பின், ராகவன் இஷ்டப்படாததால் வேலையை விட்டு விட்டாள்.
ராகவனுக்கு, கம்பெனி மட்டுமல்ல, வீட்டிலும் தான் தான் பாஸ் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. எதற்கெடுத்தாலும், 'டென்ஷன்' ஆகி, மாதத்தில் இரண்டு முறையாவது மீனாட்சியை அடித்து விடுவான். அவள் பெரிதாக எந்த தவறும் செய்திருக்க மாட்டாள். ஆனாலும், அவன் கை, அவள் கன்னத்தைப் பதம் பார்க்கும்.
எந்த, 'ரியாக் ஷனும்' இல்லாமல் கண்களை இறுக மூடி, அமைதியாக நிற்பாள், மீனாட்சி. அவன் சீறிவிட்டு வெளியேறியதும், அவள் கண்களிலிருந்து ஆறாய் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். சிலசமயம், அவள் இப்படி அமைதியாக நிற்பதைக் கூட, தன்னை அவமானப்படுத்துவதாக உணர்வான்.
'அடி வாங்கிட்டு அமைதியா நிக்கிறியே... சூடு, சொரணை இல்லியா... திருப்பி என்னை அடிக்கணும்ன்னு உனக்குத் தோணலியா?' என்பான்.
அப்போதும், அமைதியாகவே நிற்பாள், மீனாட்சி.
அலுவலகத்தில் அன்று இப்படித்தான். பி.ஏ., மாலதி, ஒரு முக்கிமான கடிதத்தில் சில பிழைகளைச் செய்துவிட, அவளைக் கூப்பிட்டான்.
''எஸ் சார்!''
''மாசம், 5ம் தேதி ஆனதும், சம்பளம் வாங்கத் தெரியுதுல்ல. வேலையில் கவனம் வேணாமா?''
''சாரி சார்...''
''என்ன சாரி பூரின்னு. இத ஒண்ண நல்லாக் கத்து வெச்சிருக்கீங்க... ஆ வூன்னா, சாரி சார், சாரி சார்ன்னு சொல்லி தப்பிச்சுக்க வேண்டியது.''
''இப்பவே சரி பண்ணி எடுத்து வந்துடறேன், சார்.''
கோபத்தில் கடிதத்தை அவள் முகத்தில் விட்டெறிந்தான்.
மாலதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவள் அந்த கம்பெனியில் சேர்ந்து ஒரு ஆண்டு தான் ஆகிறது.
''சார், நீங்க பாஸா இருக்கலாம். அதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. நீங்க தப்பே பண்ணதில்லையா... போன மாசம், சி.எம்.டி., உங்களை வாங்கு வாங்குன்னு வாங்கினாரே, எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சீங்களா?''
'டென்ஷன்' பல மடங்கு அதிகரிக்க, என்ன செய்கிறோம் என்று புரியாமல், அவளை அடிக்கக் கையை ஓங்கினான், ராகவன். அடுத்த கணம், அவனுக்கு தான் செய்ய இருந்த தவறு புரிய, கையை கீழே இறக்கினான்.
அந்த சமயம் பார்த்து, 'கம்பெனி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்' வனிதா உள்ளே நுழைய, ராகவனுக்கு கெட்ட நேரம் துவங்கியது.
இதுதான் சமயமென்று, மேலிடத்திற்குப் புகார் செய்யப் போவதாக பயமுறுத்தினாள், மாலதி.
வனிதாவின் நேரடி சாட்சியமும் இருக்கிறது. மாலதியிடம் மன்னிப்புக் கோரி பிரச்னையை முடிக்க, அவன், 'ஈகோ' தடுத்தது.
அன்று மாலை, சோகத்துடன் வீடு திரும்பினான், ராகவன்.
அவன் ஏதோ பிரச்னையில் இருக்கிறான் என்பதை உணர்ந்தாள், மீனாட்சி. கேட்க யோசனையாக இருந்தாலும், மனது கேட்கவில்லை. கோபம் வந்தால் ஒரு அறை கொடுப்பான். பார்த்துக் கொள்ளலாம் என விசாரித்தாள்.
அன்று அலுவலகத்தில் நடந்ததைச் சொன்னான், ராகவன்.
''ஒண்ணும் பிரச்னை இல்லை. எதுவானாலும் பேசி, தீர்த்துடலாம். கவலைப்படாதீங்க,'' என்றாள்.
மாலதியின் மொபைல் எண்ணை வாங்கி, அவளிடம் பேசி, வீட்டு விலாசத்தை தெரிந்து கொண்டு, ''என்னோட வாங்க,'' என்றாள்.
''எங்கே?''
''வாங்க சொல்றேன்.''
ராகவனை அழைத்து மாலதி வீட்டிற்குச் சென்றாள்.
கதவைத் திறந்த மாலதி, மீனாட்சியைப் பார்த்ததும், கண்களை அகலமாக விரித்து ஆச்சரியப்பட்டாள்.
''ஏய் மீனு, எப்படி இருக்க... காலேஜ் முடிச்சதுக்கப்புறம் தொடர்பே இல்லாம போச்சு. உள்ளே வா, என் விலாசம் எப்படி உனக்குத் தெரியும்?''
வெளியே தயங்கியபடி நின்றிருந்த ராகவனை அழைக்க, அப்போது தான் மாலதிக்குப் புரிந்தது.
''ஹேய், கொஞ்ச நேரத்துக்கு முன், நீதான் போன் பண்ணியா?''
''எஸ்...''
''உள்ளே வா!''
இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
''நீ எதுக்காக வந்திருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன். பிராப்ளம் சால்வ்ட்.''
அவளிடம், ''சாரி...'' என்றான், ராகவன்.
புன்னகைத்தாள், மாலதி.
''படிக்கும்போது, ஸ்விம்மிங் சாம்பியன். கராத்தே பிளாக் பெல்ட். நீ, மல்ட்டி டாலென்ட்டெட் வுமன். எதுவுமே தெரியாத மாதிரி, சாந்தமா வந்து நிக்கிற?
''மீனாட்சி, எங்க காலேஜ்ல ரொம்ப பாப்புலர், சார். ஒருசமயம், பக்கத்து காலேஜ் பசங்க நாலு பேர் என்னை, 'பாலோ' பண்ணி தொந்தரவு பண்ணிகிட்டே இருந்தாங்க. எவ்வளவு சொல்லியும் கேட்கலை.
''மீனாட்சி தலையிட்டு, நாலு பேரையும் ரெண்டே தட்டு தான். நிலைகுலைஞ்சு போயிட்டானுங்க. அப்புறம் எங்க காலேஜ் பக்கமே வர்றதில்லை. அவ்வளவு போல்ட் வுமன்.''
அன்றிரவு, மாலதியின் வீட்டிலேயே சாப்பிட்டுத் திரும்பினர்.
''நீ ஒரு பிளாக் பெல்ட். நான் உன்னை அடிச்சப்பல்லாம் கொஞ்சம் கூட, 'ரியாக்ட்' பண்ணாம அமைதியா இருந்துடுவே. திட்டினாக் கூட அமைதியா இருப்ப.''
''அதுக்குக் காரணம் எங்கப்பா,'' என்றாள்.
புரியாமல் விழித்தான், ராகவன்.
''எங்கப்பா, பெண்களை ரொம்ப மதிக்கிறவர். எப்பவும், எந்த சூழ்நிலையிலயும், நான் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறவர். எங்கம்மா ஏதாவது தப்பு பண்ணிட்டா, சாரின்னு சொல்வாங்க.
''பரவாயில்ல விடு, இதுக்குப் போய் எதுக்கு சாரியெல்லாம் சொல்றேன்னு சொல்வாரு. என்னை நீங்க அடிக்கறீங்கன்னு அவருக்குத் தெரிஞ்சா, மனசு உடைஞ்சுடுவாரு. அதனால தான், இந்த விஷயம் யாருக்கும், எந்த சூழ்நிலையிலயும் வெளிய தெரியக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.''
கண்கள் கலங்கி, மனதளவில் உடைந்து போனான், ராகவன்.
அவனுடைய, 'ஈகோ' மெல்ல வெளியேறி, காற்றில் கரைந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள், மீனாட்சி.
ஆர். வி. பதி