/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
200 ஏக்கரில் ஒருங்கிணைந்த 75 விவசாயிகள்
/
200 ஏக்கரில் ஒருங்கிணைந்த 75 விவசாயிகள்
PUBLISHED ON : ஏப் 30, 2025

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (எப்.பி.ஓ.,) மூலம் செல்லம்பட்டியில் உள்ள 75 விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 200 ஏக்கரில் ஒரே வித நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் தெற்காறு உபவடிநீர் பகுதியில் உள்ள ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்நிறுவனம் (எப்.பி.ஓ.,) பதிவு உருவாக்கப்பட்டது. முதல்முறையாக விவசாயிகளை ஒருங்கிணைத்து சாதித்துள்ளோம் என்கிறார் துறையின் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, உதவி வேளாண் அலுவலர் மீனா, நிறுவன இயக்குநர் பாண்டிகுமார்.
அவர்கள் கூறியதாவது:
செல்லம்பட்டியில் வைகையாற்று பாசனம் பாய்ந்து முப்போகம் விளையக்கூடிய பகுதிகளில் 2 முதல் 10 ஏக்கர் நிலம் வைத்துள்ள 75 விவசாயிகள் எங்களுடன் இணைந்தனர். நெல் அறுவடைக்கு பின் மூடைகளை இடைத்தரகர் மூலம் வியாபாரிகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக நிறுவனம் மூலம் மில்களுக்கு வழங்க திட்டமிட்டு 2000 மூடைகளை வெற்றிகரமாக விற்று கொடுத்தோம்.
நேரடியாக மில்களுக்கு அனுப்பும் போது விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. அடுத்த கட்டமாக விதைப்பு முதல் அறுவடை வரை விவசாயிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டோம்.
கூட்டு முயற்சிக்கு வெற்றி
200 ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை தயாரிப்பதற்கு 20 ஏக்கர் தனியாக தயார் செய்தோம். தரமான விதைநெல்லை வாங்கி கொடுத்த போது கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்தது. தனித்தனியாக விவசாயிகள் பயிரிடும் போது ஏக்கருக்கு ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ விதைநெல்லை பயன்படுத்தினர். 200 ஏக்கருக்கு நாற்று தயாரித்த போது ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ நெல் போதுமானது. விதைநெல் மூலம் ஏக்கருக்கு ரூ.1000 வரை மிச்சமானது.
மதுரை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை செய்து உரம் வழங்கினோம். இங்கு முப்போகம் நெல் சாகுபடி செய்வதால் இங்குள்ள மண்ணில் மணிச்சத்து (பொட்டாஷ்) அளவு இருமடங்காக இருக்கும் என்பதால் பொட்டாஷ் அளவை குறைத்து பிற உரங்களை பரிந்துரை செய்தனர். பொட்டாஷ் ஒரு மூடை ரூ.1400 வரை விற்கிறது. ஏக்கருக்கு 2 மூடைக்கு பதிலாக பாதியாக குறையும் போது உரத்தேவையும், செலவும் குறைந்தது. மண்ணும் பாதுகாக்கப்பட்டது.
நாற்றங்கால் தயாரிக்கும் போது விதைப்புக்கு முன் ரூ.2000 வரை செலவாகும். அதே செலவில் ஐந்து விவசாயிகளுக்கு நாற்று தயாரித்ததால் ஒவ்வொருவருக்கும் ரூ.400 தான் செலவானது. நாற்று பறிப்பு கூலி கிடையாது. நாற்று நடவு செலவு கிடையாது. ஒரு ஏக்கருக்கு நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பறித்து அதை வயலில் நடவு செய்வதற்கு மட்டும் ரூ.5500 செலவாகிறது.
இயந்திரத்தின் மூலம் வரிசை நடவு செய்ததில் ரூ.1500 வரை குறைந்தது. குறுகிய காலத்திற்குள் அத்தனை விவசாயிகளுக்கும் இயந்திர களை எடுப்பது மட்டும் இயலாததாகி விட்டது. இனி அடுத்த நடவில் கூடுதல் களையெடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.
இந்த முறையில் அனைத்து நெற்பயிர்களுக்கும் 50 நாட்கள் வயதாகிறது. 50 நாட்களுக்குள் மருந்து தெளித்தால் இலைச்சுருட்டு, தண்டுதுளைப்பான் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கலாம். ஒரு ஏக்கருக்கு 80 டாங்க் மருந்தை தெளிப்பான் மூலம் தெளிப்பதற்கு பதிலாக 40 டாங்க் மருந்தை ட்ரோன் மூலம் தெளித்துள்ளோம்.
மருந்தின் அளவு பாதியாக குறைந்ததால் பயிர்களில் நஞ்சுக்கழிவு தங்குவதும் குறைகிறது. பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் உயிர்வாழும். கடந்தமுறை 2000 மூடைகளை மொத்தமாக விற்பனைக்கு கொடுத்தோம். இந்த முறை 10 ஆயிரம் மூடைகளை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதை தேவைக்கேற்ப நெல் கொள்முதல் மையத்திலோ அல்லது விலை அதிகமாக இருந்தால் மில்களுக்கோ நேரடியாக வழங்குகிறோம். விவசாயிகள் கூடி வாழ்ந்தால் உண்மையாகவே விவசாயம் லாபகரமான தொழிலாக மாறிவிடும் என்றனர்.
-எம்.எம்.ஜெயலட்சுமி, மதுரை.