PUBLISHED ON : ஏப் 23, 2025

இறைச்சியின் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக பன்றி வளர்ப்பு பிரதான தொழிலாக மாறி வருகிறது. சுகாதாரமின்மை, அதிகளவு இறப்பு, நோய் பரவல் காரணங்களால் நாட்டுப்பன்றி, கருப்பு பன்றிகளின் வளர்ப்பு குறைந்து வருவதோடு வெண்பன்றி வளர்ப்பு பக்கம் கால்நடை வளர்ப்போரின் கவனம் திரும்பியுள்ளது.
சுகாதாரமான முறையில் முறையான தடுப்பூசி மற்றும் தீவனம் வழங்கினால் வெண் பன்றி வளர்ப்பில் ரூ.பல ஆயிரம் வருமானம் கிடைக்கும்.
இடத்தேவை எவ்வளவு
வெண்பன்றி வளர்ப்புக்கு உறுதியான கட்டடம் தேவை. பெரிய பன்றிகள், வளர் பன்றிகளுக்கு தனி கொட்டகை அமைக்க வேண்டும். இதுமட்டுமே அதிக முதலீட்டு செலவாக பார்க்கப்படும். தற்போதைய விதிகளின்படி பன்றிக் குடிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு குடியிருப்புகள் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. பன்றிகளுக்கு நல்ல தண்ணீரும் தேவை.
தாய், கிடாக்கள் தேர்வு
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஒரத்தநாடு, காட்டுப்பாக்கம் பண்ணையிலிருந்து தரமான தாய் மற்றும் கிடா பன்றிகளைத் தேர்வு செய்ய வேண்டும். புதிதாக பண்ணை தொடங்குவோர் முதலில் கிடா பன்றிகள் மட்டுமே வாங்கி ஆறு மாதங்கள் வரை வளர்த்து உயிருடனோ இறைச்சியாகவோ விற்கலாம்.
பன்றிகள் வளர வளர அதன் தீவனத்தேவை அதிகரிக்கும். நன்கு வளர்ந்த பன்றி ஒரு நாளுக்கு மூன்று கிலோ வரை அடர் தீவனம் உண்ணும். பன்றி வளர்ப்பவர்கள் ஓட்டல் அல்லது கல்லுாரி விடுதி உணவுக் கழிவுகளை பன்றிகளுக்கு கொடுப்பதுண்டு. தீவனச்செலவு குறைந்து லாபம் அதிகமாக இருப்பது போல தோன்றினாலும் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும்.
உணவுக் கழிவுடன் பன்றி தீவனம் கொடுத்து வளர்த்தால் எடை விரைவாக அதிகரித்து கொழுப்பு சேர்வது குறையும்.
நோய் மேலாண்மை
ப்ளு, பன்றி காய்ச்சல், கோமாரி நோய் போன்ற நச்சுயிரிகளால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகம். ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவதன் மூலம் கிருமித்தொற்றில் இருந்து கட்டுப்படுத்தலாம். சுகாதாரம் இல்லாவிட்டால் தோலில் கிருமிகளால் தொற்று அடிக்கடி ஏற்படும். தினமும் இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும்.
குட்டிகள் பராமரிப்பு
பெண் பன்றிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க சுழற்சி இருப்பதால் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். சினைக்காலம் 114 நாட்கள். ஆண்டுக்கு இரண்டு முறை இனப்பெருக்கத்திற்கு விடலாம். ஒரு முறைக்கு 10-- முதல் 14 குட்டிகள் ஈனும். குட்டிகள் ஈன்றவுடன் இரண்டு மூன்று நாட்களுக்குப்படுத்தே இருக்கும்.
குட்டி ஈனும் தருணத்தில் தாய் பன்றியை குட்டி ஈனும் கூண்டில் வைத்தால் குட்டிகளின் இறப்பை தடுக்கலாம். குட்டிகள் பிறந்த ஒரு வாரத்தில் இரும்புச்சத்துக்கான ஊசி போட வேண்டும். நல்ல தீவனம் வழங்கிப் பன்றிகளை வளர்க்கும்போது ஒன்பது மாதத்தில் 80 முதல் 100 கிலோ வரை எடை பெருக்கம் ஏற்படும். இறைச்சியாக விற்கும்போது அதிக லாபம் பெறலாம்.
வெண் பன்றி வளர்க்க விரும்புபவர்கள் மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள வெண்பன்றி வளர்ப்பு கொட்டிலை நேரில் வந்து பார்க்கலாம்.
-டாக்டர் சரவணன் உதவி பேராசிரியர் வேளாண்மை அறிவியல் நிலையம் கோமதி சங்கரேஸ்வரிவேளாண் உதவி அலுவலர் விவசாய கல்லுாரிஒத்தகடை, மதுரை அலைபேசி: 99945 05441